மதுரை திருமங்கலம் அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்தமுயன்ற கார் கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம். நென்மேனியைச் சேர்ந்த 11 பேர் காரில் தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளம் பகுதியில் நடைபெற்ற வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜைக்கு சென்றிருந்தனர். வழிபாட்டை முடித்துவிட்டு மீண்டும் சிவகங்கை நோக்கி கோவில்பட்டி வழியாக விருதுநகர் – திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
சிங்கனோடை அருகே உள்ள சாத்தான் கோட்டையைச் சேர்ந்த விக்னேஷ் கண்ணன் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது, கார் திருமங்கலம் அருகே குதிரைச்சாரி குளம்விலக்கு பகுதியில் வந்தபோது காரின் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சாலையில் கவிழ்ந்து உருண்டு விழுந்தது.
இந்த விபத்தில், காரில் சென்ற ஓட்டுநர் விக்னேஷ் கண்ணன், சிவகங்கை மாவட்டம் நென்மேனியைச் சேர்ந்த திவாகர், அரவிந்த், தினேஷ்குமார் , திருநாவுக்கரசு, சரத்குமார் உட்பட பதினோரு பேர் காருக்குள் சிக்கிக் கொண்டனர். விபத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக காரில் இருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
-ம.பவித்ரா








