ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது மக்களை எப்படியாவது ஏமாற்றி ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதற்காக தயாரிக்கப்பட்டதே தவிர, அதில் உண்மை என்பது சிறிதளவு கூட இல்லை என்பதே ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியின் நடவடிக்கைகள் உணர்த்தியுள்ளன.
திமுகிவின் தேர்தல் அறிக்கையினை பொய்மையின் மறுஉருவம் என்று சொன்னால் அது மிகையாகாது. இதற்கு ஒரு உதாரணம்தான் ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்காதது.
2020ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்கக் கோரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது, அதற்கு ஆதரவாக குரல் கொடுத்ததோடு, திமுக ஆட்சிக்கு வந்தால் 80,000 ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், போராட்டத்தை கைவிட வேண்டுமென்றும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் 2013ம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலைவாய்ப்பினைப் பெறாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை போட்டித் தேர்வின்றி பணியமர்த்துவது குறித்தோ அல்லது வெயிட்டேஜை நீக்குவது குறித்தோ எந்தவிதமான அறிவிப்பையும் திமுக அரசு வெளியிடவில்லை.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, போட்டித் தேர்வினை ரத்து செய்யவும், தேர்ச்சி மூப்பு அடிப்படையில் அவர்களை பணியமர்த்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.








