ஆபத்தான முறையில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோகளின் உரிமம் ரத்து   –  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

ஆபத்தான முறையில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தின் புறநகரில் ஷேர் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த போலீஸ் வேன் மீது மோதியது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இது குறித்து, கமுதி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இறுதியில், குடி போதையில் ஆட்டோ ஓட்டுநருக்கு செல்லப்பாண்டியனுக்கு 2 ஆண்டுகள் தண்டனை வழங்கி ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து செல்லபாண்டியன் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன், குடிபோதையில் வாகனம் ஓட்டி, விபத்து ஏற்படுத்தியதை எளிதாக எடுத்து கொள்ள முடியாது. நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்யப்பபடுகிறது. குறிப்பாக, அரசாங்கம் இந்த ஆபத்தான விதி மீறல் விகிதத்தையும் அதன் விளைவாக மனித உயிர் இழப்புகளையும் கவனத்தில் கொள்ளவில்லை. எனவே,அதிகமான நபர்களை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோ உரிமையாளர்களின் சட்டவிரோதச் செயலைத் தடுக்க வேண்டும்.

ஆபத்தான முறையில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அதிகமான நபர்களை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய வேண்டும். இது குறிந்து , மோட்டார் வாகன விதிகளில் தேவையான திருத்தம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, இது குறித்த அறிக்கையை போக்குவரத்துத் துறை செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும் என  உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.