நெட்ஃபிளிக்ஸில் பாஸ்வேர்டு பகிர்தல் முறை ரத்து!

நெட்ஃபிளிக்ஸில் பாஸ்வேர்டு பகிர்தல் முறையை ரத்து செய்ய உள்ளது என அதன் புதிய தலைமை நிர்வாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நெட்ஃபிளிக்ஸ் சர்வதேச அளவில் இயங்கும் முன்னணி ஓடிடி தளமாகும். உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை…

நெட்ஃபிளிக்ஸில் பாஸ்வேர்டு பகிர்தல் முறையை ரத்து செய்ய உள்ளது என அதன் புதிய தலைமை நிர்வாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நெட்ஃபிளிக்ஸ் சர்வதேச அளவில் இயங்கும் முன்னணி ஓடிடி தளமாகும். உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. ஒரு மாதம், மூன்று மாதம், ஆறு மாதம் என்று பல்வேறு சந்தா திட்டங்கள் வைத்துள்ளனர். அந்தவகையில் ஒரு அக்கவுண்ட் பயன்படுத்தி குறிப்பிட்ட நபர்கள் வரை பாஸ்வேர்டு சேர் செய்து (பாஸ்வேர்டு பகிர்ந்து) பயன்படுத்தலாம் என்ற நிலை இருக்கிறது. இந்த முறையை ரத்து செய்ய உள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தது.

இந்நிலையில் டெட் சரண்டோஸ் மற்றும் கிரெக் பீட்டர்ஸ் ஆகியோர் புதிய தலைமை நிர்வாக அதிகாரிகளாக பதவியேற்றுள்ளனர். இதனால் அந்த அறிவிப்பில் ஏதாவது மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏற்கனவே வந்த அறிவிப்பை புதிய தலைமை நிர்வாக அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். புதிய விதி அமலுக்கு வந்தால், பாஸ்வேர்டு சேர் செய்யும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். டிஸ்னி ஹாட்ஸ்டார் போல் விளம்பரத்துடன் கூடிய குறைந்த விலை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். நெட்ஃபிளிக்ஸ் பயனர்களை உயர்த்தும் நோக்கிலும், வருவாய் பற்றாக்குறையை போக்கவும் இந்த முடிவு எடுக்கப்படுவதாக கூறுகின்றனர்.

உலகம் முழுவதும் தற்போது 100 மில்லியன் மக்கள் பாஸ்வேர்டை பகிர்வதன் மூலம் வீடியோக்களை பார்த்து வருகின்றனர். இதை நெறிப்படுத்துவதற்காக தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. முக்கியமாக இந்தியா போன்ற நாடுகளை மையமாக வைத்து, நிறுவனத்தின் சந்தாதாரர்கள் எண்ணிக்கையை 15 முதல் 20 மில்லியன் வரை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். அதேநேரத்தில் நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்டு ஷேரிங் ஆப்ஷனை முழுமையாக ரத்து செய்வது சவாலான காரியம் என்றும் கூறினர்.

விளம்பர அடிப்படையிலான திட்டம் தற்போது பல நாடுகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. 6.99 டாலர் மதிப்பில் இந்தத் திட்டம் அமெரிக்கா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, பிரேசில், பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், அர்ஜென்டினா, எல் சால்வடார், குவாத்தமாலா, ஹோண்டுராஸ் மற்றும் டொமினிகன் ஆகிய நாடுகளில் பாஸ்வேர்டு பகிர்வு ரத்து செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.