சிஏஏ சட்டம் கொரோனா அலை பரவல் முடிவுக்கு வந்தவுடன் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கம் சென்றுள்ளார். அங்கு சிலிகுரியில் நடந்த கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திரிணாமுல் காங்கிரஸ் சிஏஏ குறித்து தவறான வதந்திகளை பரப்பி கொண்டு வருகிறது. மேலும், ‘மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஊடுருவல் தொடர வேண்டும் என்றே விரும்புகிறார். ஆனால் ஊடுருவிய அகதிகளுக்கு மேற்கு வங்கத்தில் குடியுரிமை வழங்கப்பட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். கொரோனா அலை முடிந்தவுடன் நாங்கள் உறுதியளித்தது போல் சி.ஏ.ஏ உடனடியாக அமல்படுத்தப்படும்’ என்று குறிப்பிட்டார்.
மேற்கு வங்கத்தில் 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது பாஜக 3 இடங்களை மட்டுமே வென்றிருந்தது. ஆனால் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 77 இடங்களை வென்றுள்ளது. சுமார் 2.28 கோடி மக்களின் வாக்குகளை பாஜக கடந்த தேர்தலில் பெற்றுள்ளது. இதன் மூலம் எங்கள் கட்சி ஒவ்வொரு கிராம மக்களிடையேயும் சென்றுள்ளது என்பது உறுதியாகிறது. மமதா பானர்ஜி தனது அராஜகத்தையும், ஊழலையும் நிறுத்தும் வரை உண்மைக்காகவும், நியாயத்திற்காகவும் போராடுவதை பாஜக நிறுத்தாது என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், மேற்கு வங்க மக்கள் தொடர்ந்து 3-வது முறையாக மமதாவை முதலமைச்சராக தேர்ந்தெடுள்ளார்கள். இதை மனதில் வைத்தாவது அவர் நன்றாக மக்கள் பணியாற்றுவார்கள் என்று நினைத்தோம். ஆனால் ஊழல், அராஜகம், பாஜக தொண்டர்களை கொலை செய்வது என எதையும் அவர் நிறுத்தவில்லை. இதனை எதிர்த்து பாஜக போராடாது என்று அவர் நினைக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.







