36 வருட தவம்! உள்ளம் உருகிய லோகேஷ்!

தமிழ் சினிமாவின் தற்போதைய Most Wanted இயக்குநர் லோகேஷ் கனகராஜ். முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் லோகியின் இயக்கத்தில் பணிபுரிய விரும்புகிறார்கள். ‘நான் சினிமாக்குள்ள வந்ததுகுக்கு ஒரே காரணம் சார் மட்டும் தான்.…

தமிழ் சினிமாவின் தற்போதைய Most Wanted இயக்குநர் லோகேஷ் கனகராஜ். முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் லோகியின் இயக்கத்தில் பணிபுரிய விரும்புகிறார்கள். ‘நான் சினிமாக்குள்ள வந்ததுகுக்கு ஒரே காரணம் சார் மட்டும் தான். நான் யாருக்கிட்டேயும் அஸிஸ்டெண்டா வேலை செஞ்சதில்ல, எந்த இன்ஸ்டிட்யூட்-க்கும் போனதில்ல! ஒன்னே ஒன்னு பண்ணிருக்கேன்.. இவரு படத்தை பாத்திருக்கேன்.’ கைதி படத்திற்காக விருது வாங்கும் போது தன் கலையுலக ஆசானான கமலை கைகாட்டி லோகேஷ் சொன்ன வார்த்தைகள் இவை. மேலும், ‘கைதி படத்தோட கருவே கமல் சாரோட விருமாண்டி பார்த்து தான் தோனுச்சி. அந்த படத்துக்காக அவருகிட்டையே விருது வாங்குறேன். இந்த விருது எவ்ளோ வெயிட்டா இருக்குன்னு எனக்கு மட்டுமே தெரியும!’ என்று கூறி உருகினார் லோகேஷ்.

சில மாதங்களிலேயே லோகேஷை அழைத்து கதை கேட்டு மற்றுமொரு மாபெரும் விருதை லோகேஷுக்கு வழங்கினார் கமல். yes, அரசியலால் ஏற்பட்ட இடைவேளிக்கு பிறகு கமல் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்று அறிவிப்பு வெளியானது. ‘வந்தாரு.. மாநகரம்ன்னு ஒரு சின்ன படம் பன்னாரு, ஹிட்டாச்சு!, அப்படியே கார்த்தி, இளைய தளபதின்னு ட்ராவல் பண்ணி இப்போ உலகநாயகன வச்சே சம்பவம் பன்றாரே!’ என
மிகச்சுலபமாக அவரின் வெற்றியை சுருக்கிவிடலாம். ஆனால், 2013ல் தொடங்கப்பட்ட அவரின் முதல் படமான மாநகரத்தை 2017ல் தான் வெளியிட முடிந்தது. ஒரு கலைஞனாக எத்தனை இன்னல்களை, மன உளைச்சல்களை அவர் சந்தித்திருக்கக்கூடும் அத்தனையையும் தாண்டித்தான் தன் வெற்றிக்கணக்கை தொடங்கினார் லோகேஷ்.

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான விஜயையோ, உலகநாயகன் கமலையோ வைத்து லோகேஷ் தன் பயணத்தை தொடங்கவில்லை. மார்க்கெட்டிலே இல்லாத மன்சூர் அலிகானை மனதில் வைத்து தொடங்கப்பட்ட கதை தான் கைதி என பல இடங்களில் கூறியுள்ளார். தன் படங்களின் திரைக்கதைகளிலும், மேக்கிங்கிலும் அவர் செய்த
மேஜிக் தான் உச்சநட்சத்திரங்களை அவரிடம் கொண்டு சேர்த்தது. அந்த மேஜிக் மந்திரத்தில் வருவதில்லை. தன் படங்களில் ஒவ்வொரு காட்சிக்கும், frame-க்கும் அவர் எவ்வளவு மெனக்கெடுகிறார் என்பதை அவர் பேட்டிகளின் மூலம் காணலாம்.

கைதி படத்தின் 50வது நிமிடத்தில் முதல் ஆக்‌ஷன் சீன் வரும். அதில் கார்த்தியின் லாரிக்கு முன்னாடியும் பின்னாடியும் வில்லனின் அடியாட்களுடைய வண்டிகள் அணைகட்டிக் கொண்டே அவர்களை சேஸ் செய்யும். படத்தின் விறுவிறுப்பை கூட்டி கையில் இருக்கும் பார்ப்கார்னை மறந்து ஆடியன்ஸை சீட்டின் நுணிக்கு கொண்டு வந்த முக்கியமான சீக்வென்ஸ் இது. அதில், கடைசியாக வரும் கூலிப்படையினரின் காரின் பின்புற கண்ணாடி வழியாக கேமிரா புகுந்து, கார்த்தி ஓட்டும் லாரியின் பின்புற வழியாக ஊடுருவி அப்படியே அதற்கு முன்பு இருக்கும் ஜீப்புனுள் நுழையும். அங்கே கூலிப்படையினர் பெட்ரோல் வெடிகுண்டுகளை கொளுத்தி தூக்கிவீசுதோடு அந்த சிங்கில் ஷாட் முடியும்.

இந்த 20 நொடி காட்சிகளை படமாக்க லோகேஷ் எடுத்துக்கொண்டது 16 மணிநேரம். இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசும் போது, ‘அந்த ஷாட்டே இல்லாமக்கூட அந்த சண்டைக்காட்சியை எடுத்திருக்கலாம், படமும் வெளியாகியிருக்கலாம். ஆனால் வழக்கமான சேஸிங் காட்சியாக இருந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். எனவே ஒரே ஷாட்டில் அந்த மொத்த சூழலையும், மொத்த கதாப்பாத்திரங்களின் பரபரப்பையும் பதிவு செய்து அந்த காட்சியை மெருகேற்றினோம்’ என குறிப்பிட்டார். இதன் மூலம் படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் வெளிப்படும் உணர்வுகளை அதன் Extreme வரை ஆடியன்ஸை சென்றடைய வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

அதேபோல், கைதி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கார்த்தி அந்த, ‘Gatling Gun’-ஐ கையில் தூக்கி வந்து ‘கிடுகிடுவென’ சுட்டுத்தள்ளி மொத்த கூலிப்படையினரையும் தெறிக்கவிடுவார். அந்த காட்சிகள் தான் படத்தை பளாக் பஸ்டர் கிட் ஆக்கியது. அந்த ‘Gatling Gun’ பற்றி குறிப்பிட்டவர், ‘அதை தயார் செய்ய இரண்டு மாதம் ஆனது. அந்த 60 நாளுமே அந்த Gun-ஐ செய்பவருக்கு போன் செய்து விசாரித்துக் கொண்டே இருப்பேன். கிராபிக்ஸ் இல்லாமல் உண்மையான ‘Gattling gun’ போலான மெக்கானிசத்துடன் அது இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்” என குறிப்பிட்டார். இந்த perfection-கள் எல்லாம் கூட ஒருவரை சிறந்த இயக்குநராக ஆக்கலாம். ஆனால் சிறந்த கலைஞனாக்கி விடமுடியாது. தன் படைப்புகளுக்கு வரும் பாராட்டுக்களை மாலையாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில், விமர்சனங்களுக்கும் செவிகொடுத்து மதிப்பளிக்கும் போது தான் ஒருவன் கலைஞனாகிறான்.

கைதி வெளியாவதற்கு முன்பே தளபதி விஜயின் கால்ஷீட் கிடைத்துவிட்டது. அவரின் கால்ஷீட்டிற்கு ஏற்ப குறிப்பிட்ட நேரத்திற்குள் படத்தை முடிக்க வேண்டிய நெருக்கடி. சினிமாவில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை என மொத்ததிலும் தன் பெயரை எழுதிக் கொள்வதையே தங்களுக்கான அங்கீகாரமாக நினைக்கப்படும் சூழலில், எந்தவிதமான ஈகோவும் பார்க்காமல் சமகால இயக்குநரான ரத்னகுமார் உள்ளிட்ட நண்பர்களை அழைத்து வசனங்களை எழுத வைக்கிறார். மாஸ்டர் கதைக்கான இன்ஸ்பிரேஷனே கமலின் ‘நம்மவர்’ தான் எனக்கூறி அதற்கான கிரெடிட்டையும் கொடுக்கிறார். மாஸ்டரின் வெற்றியைத் தாண்டி படத்திற்கு வந்த சில நெகடிவ் விமர்சனங்களையும் ஏற்றுக் கொண்டு அதற்கான விளக்கங்களையும் கொடுக்கிறார். ஒவ்வொரு பேட்டிகளிலும் உடன் பணியாற்றியவர்களை குறிப்பிட்டு பாராட்டுக்களை பகிர்ந்து கொள்கிறார். இவையெல்லாம் தான் லோகேஷை ஒரு சிறந்த கலைஞனாக மக்களால் கொண்டாட வைக்கிறது.

அரசியலில் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் கமலிடம் தமிழக மக்கள் தொடர்ந்து கேட்பது இது தான். ‘என்ன வேணும்னா பன்னுங்க! ஆனா படம் பன்னுங்க என்பதே அது. நான்காண்டுகளாக அவரை திரையில் ‘மிஸ்’ பண்னிய ரசிகர்களுக்கு விக்ரம் படத்தின் டீஸர் காட்சிகளைக் கொண்டே விருந்து வைத்தார் லோகேஷ் கனகராஜ். படத்திற்கான எல்லா வகையான Gun-களையும் லோட் செய்து வைத்து விட்டார் லோகேஷ். வரும் மே15ம் தேதி ட்ரெய்லரும், ஜூன் 3ம் தேதி படமும் திரையில் வெடித்து தள்ள காத்திருக்கிறது. யாரைப் பார்த்து சினிமாவுக்கு வந்தாரோ அவரை வைத்தே ஒரு சினிமாவை உருவாக்கும் தருணத்தை ஒரு கலைஞனால் எப்படி சாதாரணமாக கடந்துவிட முடியும்? ஒவ்வொரு தருணத்தையும் கொண்டாட்டங்களோடு பகிர்கிறார் லோகேஷ்.

https://twitter.com/Dir_Lokesh/status/1521879100192747520

நேற்று உலக இயக்குநர்கள் தினத்தில் தன்னுடைய இயக்குநர் உலகமான கமல்ஹாசனுடன் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் லோகேஷ். ‘36 வருட தவம்! எனக்குள் இருக்கும் இயக்குனரை என் உலகநாயகன் பாராட்ட’ என உள்ளம் உருகியிருக்கிறார். படத்தின் FINAL OUT-ஐ பார்த்து கமல் பாராட்டியிருப்பார் என்று அந்த ட்வீட்டை பார்த்து புரிந்திகொள்ள முடிகிறது.

உத்தமவில்லன் படத்தில் கமலும், அவரின் மகனும் உரையாடும் காட்சி(மேலே 2:10 முதல்) , பார்ப்பவர்களின் கண்களில் எல்லாம் கண்ணீர் வரவழைக்கும். அந்த தந்தை – மகன் இடத்தில் கமலை குருவாகவும், லோகியை மாணவனாகவும் வைத்து பார்ப்பது போல நெகிழ்வானதொரு உணர்வே லோகியின் அந்த ட்வீட்டை பார்க்கும் போது நமக்கு வருகிறது! படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று, உலக நாயகன் போல, உலகமே உங்களை பாராட்ட வேண்டும் என்று வாழ்த்திக் கொள்கிறோம் லோகி!  விக்ர..ம்ம்ம் (Feel the bgm)!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.