மாணவியை ஏற்றாமல் சென்ற பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்!

வாணியம்பாடி அருகே கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பேருந்து நிலையத்தில், பிளஸ் டூ தேர்வு எழுத செல்வதற்காக பிளஸ் டூ மாணவி ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அப்பகுதிக்கு வந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால், மாணவி பேருந்தை பின்தொடர்ந்து ஓடினார். மாணவி பின்தொடர்வதை பார்த்தும் சிறிது தூரத்திற்கு ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமலேயே சென்றுக் கொண்டிருந்தார்.

இதைபார்த்த சக பயணிகள் மற்றும் மாணவியின் பின்னால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் கூச்சலிட்டதால், ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி மாணவியை ஏற்றிக் கொண்டார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து, இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.