வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான அடித்தளத்தை உருவாக்கும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார். 7 முன்னுரிமைகளை அடிப்படையாக கொண்டு இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: ஒரு முன்னேறும் சமூகத்தின் கனவுகளை நிறைவேற்றக்கூடிய வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. ஏழை மக்கள், நடுத்தர மக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினர் கனவுகளையும் நிறைவேற்றும் பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது. அனைத்து துறைகளுக்கும் சமமாக கவனம் செலுத்தப்பட்டு இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
கிராமங்களிலும் நகரங்களிலும் வாழக்கூடிய பெண்கள் வாழ்வை மேம்படுத்துவதற்கு இந்த பட்ஜெட்டில் அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பெண்கள் சுய உதவிக்குழுக்கள் மேம்படுத்தப்பட உள்ளன. பெண்களுக்கென பிரத்யேக செமிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது பெண்கள் முன்னேற்றதுக்கு வழிவகுக்கும்.
டிஜிட்டல் பேமெண்ட் துறையின் வெற்றி வேளாண்மை துறையில் பிரதிபலிக்க இருக்கிறது. டிஜிட்டல் விவசாய உள்கட்டமைப்பு மேம்பாடு என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 3 ஆண்டுகளில் இளைஞர்களின் திறனை மேம்படுத்த பிரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜா 4.0 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்புக்கான பயிற்சி, நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல் போன்றவை செயல்படுத்தப்பட இருக்கின்றன.
நடுத்தர மக்களை மேம்படுத்துவதற்காக நமது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முக்கியமாக அவர்களது வாழ்வை மேம்படுத்துவதற்காக வரி விகிதத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.







