வள்ளலார் வழியில் பசிப்பிணி போக்க முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்தி உள்ளதாக அமைச்சர் தாமோ அன்பரசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி வள்ளலாரின் முப்பெரும் விழா, தனிப் பெருங்கருணை நாள், ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் விழா செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார். வள்ளலார் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின் ஆண்டுதோறும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்த அமைச்சர் அன்பரசன், பொதுமக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
விழாவில் உரையாற்றிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், ”வள்ளலார் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு, பசிப்பிணி போக்க ஆரம்பப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. வள்ளலார் வழியில் ஏழைகளின் பசிப்பிணி போக்க நாமும் உதவிடுவோம்” என்றார்.







