பிரேசிலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரேசிலில் சாவ் பாலோ மாகாணத்தில் கடலோரப் பகுதிகளில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து தென்கிழக்கு பிரேசில் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சாவ் பாலோ மாகாணத்தில் குளிர்கால திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சாவ் பாலலோ, இல்ஹபேலா ,சாவோ செபஸ்டியாவோ, உபாதுபா மற்றும் பெர்டியோகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் இந்த நகரங்கள் முழுவதும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாலைகள் முழுவதும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், சேதமடைந்தும் உள்ளதால் இந்த பகுதிகளுக்குச் செல்லும் பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கனமழையால் சில இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு, 50 -க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதுவரை 300க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் மாயமாகியுள்ளதாகவும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி அங்கு தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி நேற்று 24 பேர் உயிரிழந்தாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பலி எண்ணிக்கை 36-ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன 40 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு பிரேசில் வரலாற்றில் குறுகிய காலத்தில் ஏற்பட்ட மிகத் தீவிரமான புயல் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா