ஜேஎன்யு பல்கலை.யில் தமிழ்நாடு மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்-அமைச்சர் உதயநிதி, எழிலரசன் கண்டனம்

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் பெரியார் படங்களை உடைத்ததுடன், தமிழ்நாடு மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக மாணவர் அணிச் செயலாளர் சிவிஎம்பி.எழிலரசன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.…

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் பெரியார் படங்களை உடைத்ததுடன், தமிழ்நாடு மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக மாணவர் அணிச் செயலாளர் சிவிஎம்பி.எழிலரசன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்  கூறியிருப்பதாவது: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பினர் தமிழ் மாணவர்களின் மீது குறிவைத்து இனவெறி கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தியைக் கேட்டு தமிழ்நாடே கொந்தளித்து நிற்கிறது. இதனைக் கேள்விப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸாடாலின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

திமுக என்றென்றும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வகுத்து தந்த அறவழியில் அறிவாயுதம் ஏந்தி போரிடுகிறது. சமூகநீதி, பெண்ணுரிமை, மொழி உரிமை, சாதி மறுப்பு, மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகிய கொள்கைகளை பாஜகவின் தலைமைபீட செவிப்பறை கிழியும் வரை எதிரொலித்துக் கொண்டே இருக்கும். உடைக்கப்பட்ட தந்தை பெரியாரின் உருவப்படம் அங்கு மீண்டும் புதியதாய் காட்சியளிக்கிறது!

மேலும், விரைவில், டெல்லி ஜெ.என்.யூ. பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரை பற்றிய கருத்தரங்கு பரப்புரையை தொடங்கவிருக்கிறோம்.

டெல்லி ஜெ.என்.யூ.பல்கலைக் கழகத்தில் பயிலும், தமிழ்நாட்டு மாணவர்களை இனவெறியோடு கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கும் பா.ஜ.க.வின் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் மீது, பல்கலைக் கழக நிர்வாககமும், டெல்லி காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஆதரவாக களமாட திமுக இளைஞர் அணியும், மாணவர் அணியும் என்றென்றும் துணை நிற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.