2023ம் ஆங்கில புத்தாண்டையொட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
2022ம் ஆண்டு நிறைவடைந்து 2023ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் மக்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் ஆங்கில புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். சென்னை, கோவை, மதுரை, போன்ற நகரங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் ஆங்கில புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள் நடைபெற்றன.
சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புத்தாண்டு 2023 கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! சக குடிமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் வணக்கங்களும் நல்வாழ்த்துக்களும். 2023-ம் ஆண்டு நம் வாழ்வில் புதிய உத்வேகங்கள், இலக்குகள் மற்றும் சாதனைகளைக் கொண்டுவரட்டும். தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக நம்மை மீண்டும் அர்ப்பணிக்க உறுதி ஏற்போம்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில், 2023ம் ஆண்டு சிறப்பாக அமையட்டும்! அது நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் வெற்றிகள் நிறைந்ததாக இருக்கட்டும். அனைவருக்கும் அற்புதமான ஆரோக்கியம் கிடைக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.







