வாசிப்பை வலியுறுத்தும் விதமாக புத்தகங்களை கொலு வைத்து ராணி அண்ணா கல்லூரியினர் அசத்தியுள்ளனர்.
புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து வரும் 9 நாட்கள் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. மனிதனாக பிறந்தவன் படிப்படியாக தனது குணநலனை மாற்றி, தெய்வ நிலைக்கு உயர வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் கொலு வைப்பவர்கள் 7 அல்லது 9 படிக்கட்டுகள் அமைத்து அதில் பொம்மை களை அலங்கரிப்பர்.
முதல் படிக்கட்டில் கலசமும். அந்த கலசத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு அம்பிகையை எழுந்தருள் செய்து பூஜையும் நடத்தப்படும். மேலும் முதல் படியில் ஓரறிவு கொண்ட புல், பூண்டு, செடி கொடிகளும், 2-வது படிக்கட்டில் 2 அறிவு கொண்ட சிப்பி. சங்கு போன்றவையும், 3- வது படிக்கட்டில் 3 அறிவு கொண்ட எறும்பு, கரையான் போன்ற பொம்மைகளும் வைப்பர்.
4-வது படியில் 4 அறிவு கொண்ட நண்டு, வண்டு போன்ற ஜீவராசி களின் பொம்மைக ளும், 5-வது படியில்.5 அறிவு கொண்ட விலங்குகளின் பொம்மைகளும், 6-வது படிக்கட்டில் நாட்டிற்காக உழைத்த தலைவர்களின் பொம்மைகளும், 7-வது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளும் இடம்பெறும்.
இதேபோல 8-வது படியில் தேவர்கள், மற்றும் தெய்வங்களை வைப்பர். 9- வது படியில் மும்மூர்த்திகள் அவர்களது துணைவியர்கள் இடம்பறுவர். சமீப காலங்களாக கொலுக்களில் புதிய புதிய கொலுக்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் சாக்லேட் கொலு, சந்திரயான் கொலு, அரசியல் தலைவர்கள் கொலு, கொரானோ விழிப்புணர்வு கொலு , இயற்கையை பாதுகாக்கும் வகையிலான கொலு போன்றவை இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் திருநெல்வேலியில் அமைந்துள்ள ராணி அண்ணா கல்லூரியில் வாசிப்பை வலியுறுத்தும் விதமாக புதுவிதமான கொலுவை வைத்து அசத்தியுள்ளனர். இந்த கொலுவில் சிறார் இலக்கியம், பெண்கள் சார்ந்த புத்தகங்கள், தமிழ் இலக்கிய நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், இயற்கை சார்ந்த புத்தகங்கள் , கல்வி சார்ந்த புத்தகங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.







