சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் -போலீசார் விசாரணை

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று மதியம் 12.30 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர்…

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடித்து
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று மதியம் 12.30 மணிக்கு வெடிகுண்டு
வெடிக்கும் என மர்ம நபர் ஒருவர் இன்று மதியம் 1.30 மணியளவில் காவல்
கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தெரிவித்துவிட்டு தொடர்பைத் துண்டித்தார். இந்த
தகவலின் பேரில் சென்ட்ரல் ரயில்வே போலீசார் மோப்ப நாய் மற்றும்
வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகளின்
உடைமைகள் மற்றும் ரயில்களில் தீவிர சோதனை மேற்கொண்ட போது வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இதனையடுத்து செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை செய்த போது, வியாசர்பாடியைச் சேர்ந்த 21வயதான மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் போன் செய்து மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து வியாசர்பாடி போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரைப் பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் இவர் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும், கடந்த ஏப்ரல் மாதம் இவரின் தந்தை மொபைலில் ஏற்கனவே சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மிரட்டல் விடுத்ததும் அப்போது போலீசார் எச்சரித்து அனுப்பியதும் தெரியவந்தது. மேலும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு டிஸ்சார்ஜ் ஆன இளைஞர் வீட்டில் தங்கி வரும் நிலையில், இன்று காலை இளைஞரின் தந்தை மற்றும் மனைவி உடல் நல பிரச்சனை சம்மந்தமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

அப்போது வீட்டிலிருந்த அவரது தந்தையின் செல்போனில் மீண்டும் இளைஞர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. மேலும் நேரத்தைக் கவனிக்காமல் இளைஞர் மாற்றி கூறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சென்ட்ரல் ரயில்வே போலீசார் பெற்றோரை வரவழைத்து எழுதி வாங்கி கொண்டு எச்சரித்து இளைஞரை அனுப்பி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.