இஸ்லாமியர்களின் ஆதரவை திரட்ட பாஜக புதிய திட்டம்

பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களின் ஆதரவை அதிக அளவில் திரட்ட பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று முடிவடைந்தது. இந்த கூட்டத்தில் பேசிய…

பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களின் ஆதரவை அதிக அளவில் திரட்ட பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று முடிவடைந்தது.

இந்த கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இன்னும் 30-40 ஆண்டுகளுக்கு பாஜகவின் காலமாகவே இருக்கும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பாஜக மிகப் பெரிய அளவில் மக்களின் ஆதரவை பெற்று வருவதை சுட்டிக்காட்டிப் பேசினார். அதேநேரத்தில், தொடர் பின்னடைவை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சியை கேலி செய்வதை விட்டுவிட்டு, அக்கட்சி செய்த தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த மாநாட்டில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களின் ஆதரவை திரட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆலோசனையின்போது, உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத் தேர்தலின் முடிவுகள் குறித்து ஆராயப்பட்டதாகக் கூறப்படுகிறது. சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்பு வெற்றி பெற்ற ஆசம்கர் தொகுதியிலும், அக்கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான் முன்பு வெற்றி பெற்ற ராம்பூர் தொகுதியிலும் பாஜக வேட்பாளர்கள் தற்போது வெற்றி பெற்றது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிறுபான்மை மக்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமாக வசிக்கும் தொகுதிகளாக இருந்தும், இவ்விரு தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதன் பின்னணி குறித்தும் இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணம் குறித்தும் ஆராயப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மக்களுக்கும்; வளர்ச்சிக்கும் ஆதரவான கட்சி பாஜக என்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி கூறுவதில் உள்ள உண்மையை இஸ்லாமியர்கள் உணரத் தொடங்கி இருப்பதாகவும், இதன் காரணமாகவே அவர்கள் புதிய ஆதரவாளர்களாக உருவெடுத்திருக்கிறார்கள் என்றும் கட்சி முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்தே, இஸ்லாமியர்களில் 80 சதவீதம் உள்ள OBC இஸ்லாமியர்களை குறிவைத்து அவர்களின் ஆதரவை திரட்ட புதிய பிரச்சார திட்டங்களை வகுக்க பாஜக முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.