அதிமுக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் 100 தலைமை வந்தாலும் அக்கட்சி தேராது என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தருமபுரி அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து
கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவிற்கும் தமக்கும் தற்போது எந்த சம்பந்தமும் இல்லை என்றார். எனினும் தாம் முன்பு அங்கம் வகித்த கட்சி என்கிற அடிப்படையில் அதிமுகவில் தற்போது நடைபெறும் சம்பவங்கள் வருத்தத்தை அளிப்பதாகவும் அவர் கூறினார். அமமுக செயல்வீரர்கள் கூட்டங்கள், முன்பே திட்டமிடப்பட்டது என்றும் அதிமுகவில் தற்போது நிகழ்வுகளுக்கும் இந்த செயல்வீரர்கள் கூட்டங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் லட்சியங்களையும், கொள்கைகளையும் நிலைநாட்டவே அமமுக தொடங்கப்பட்டதாகக் கூறிய டிடிவி தினகரன், அதிமுகவை பொறுத்தவரை தங்களுக்கு வேறு கட்சி என்றார். அதிமுகவில் பொதுக்குழு நடந்தாலும் நடக்காவிட்டாலும், இரட்டை இலை சின்னம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தங்களுக்கு கவலை இல்லை என அவர் தெரிவித்தார். அதிமுகவில் எத்தனை தலைமை இருந்தாலும் அதனை தாம் பொருட்படுத்தவில்லை எனக் கூறிய டிடிவி தினகரன், அக்கட்சி தற்போது வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்தார். 100 தலைமை வந்தாலும் அதிமுக தேராது என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.







