“அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற பாஜகவை வெளியேற்ற வேண்டும்” – கனிமொழி பேச்சு

அண்ணல் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் பாஜகவை இந்த நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளரும், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களவை…

அண்ணல் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் பாஜகவை இந்த நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளரும், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி,  திருச்செந்தூர் அருகிலுள்ள குலசேகரப்பட்டினம், மெஞ்ஞானபுரம், பரமக்குறிச்சி, பிச்சிவிளை, நா.முத்தையாபுரம், கீழநாலுமூலைக்கிணறு, நடுநாலுமூலைக்கிணறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுட்டார்.

அவருக்கு I.N.D.I.A. கூட்டணி கட்சியினர் சார்பில் மேள தாளங்கள் முழங்க, வான வேடிக்கைகளுடன், மலர் தூவியும், பொன்னாடை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. நா.முத்தையாபுரம், கீழநாலுமூலைக்கிணறு, நடுநாலுமூலைக்கிணறு ஆகிய பகுதிகளில் உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து கனிமொழி மரியாதை செய்தார்.

தொடர்ந்து அப்பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட அவர் பேசியதாவது :

“அண்ணல் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் பாஜகவினரை இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்க வேண்டும். மத்தியில் I.N.D.I.A. கூட்டணி தலைமையிலான ஆட்சி உருவாக வேண்டும் என்பதை மனதில் கொண்டு வாக்களியுங்கள். இதுவரை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடியின் ஆட்சியை, நாம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

மக்களை பிரித்து கலவரத்தை உருவாக்கி குளிர்காயக்கூடிய ஆட்சியாக பாஜக ஆட்சி உள்ளது. மணிப்பூரில் இரண்டு பெண்களை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொடுமைப்படுத்தி, அவமானப்படுத்தி இழுத்துக்கொண்டு வந்தார்கள். அந்த பெண்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட, மோடி வாய்திறக்கவில்லை. இதுதான் மோடி அரசின் சாதனை.

மழை வெள்ள காலத்தில் தமிழகத்தில் வந்து பார்க்கவில்லை. ஒரு ரூபாய் நிதி உதவி கூட அளிக்கவில்லை. இப்போது வாரத்தில் 4 நாட்கள் தமிழகத்தில் தான் உள்ளார். தமிழகத்தில் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிவிடலாம் என்று வருகிறார். நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.”

இவ்வாறு கனிமொழி கருணாநிதி எம்.பி. பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.