அனைத்து நாட்களிலும் வழிபட அனுமதியளிக்கக் கோரி, தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பாஜக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் தமிழ்நாடு அரசு ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அனைத்து நாட்களிலும் கோயில்களைத் திறக்க வேண்டும் எனவும் நவராத்திரி பண்டிகை நெருங்குவதால் இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கோயில்களை அனைத்து நாட்களிலும் திறக்க வலியுறுத்தி வரும் 7-ம் தேதி காலை 11 மணிக்கு முக்கிய கோயில்களின் முன் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ள அவர், பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஒருங்கிணைப்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.







