பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியை ‘தீவிரவாதி’ என மக்களவையில் விமர்சித்த பாஜக எம்பி ரமேஷ் பிதூரி மீது கடும் நடவடிக்கை எடுக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
நாடாளுமன்ற மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலியை ‘தீவிரவாதி’ என விமர்சித்த பாஜக எம்பி ரமேஷ் பிதூரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்துள்ளார். மேலும் ரமேஷ் பிதாரி விளக்கம் தர பாஜக தலைவர் ஜேபி நட்டா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
மக்களவையில் நேற்று சந்திரயான் -3 குறித்த விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலியை பாஜக எம்பி ரமேஷ் பிதூரி தீவிரவாதி என விமர்சித்தார். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. மக்களவையில் இருந்து ரமேஷ் பிதூரியை சஸ்பென்ட் செய்ய வேண்டும் என காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தினார். அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த தகாத வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் இந்தப் பிரச்சனை ஓயவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ராவும் ரமேஷ் பிதூரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதனிடையே பாஜக எம்பி ரமேஷ் பிதூரி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா, ரமேஷ் பிதூரி 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் தர வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.







