சென்னையில் பாஜக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் பாலசந்தர். இவர் பாஜக எஸ்சி/எஸ்டி பிரிவு மத்திய சென்னை மாவட்டத் தலைவராக இருந்து வந்தார். இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் பாதுகாப்புக்காக காவலர் ஒருவரும் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று இரவு பாலசந்தர் தனது பி.எஸ்.ஓ பாலகிருஷ்ணனுடன் சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவிற்கு சென்றுள்ளார். அங்கு பாலசந்தர் நின்று பேசிக்கொண்டிருந்த போது பி.எஸ்.ஓ பாலகிருஷ்ணன் அருகிலிருந்த டீக்கடைக்கு சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் பாலசந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார், உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்தில் தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்து, தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள இரண்டு சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.








