பாஜக பிரமுகர் திருமணம் செய்ய கட்டாயப்படுத்துவதாகக் கூறி பெண் விஷம் குடித்து உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் குடை பாறைப்பட்டி, பெரியாண்டவர் நகரைச் சேர்ந்தவர் மனிஷா (25). சட்டம் பயின்றவர். இவரது கணவர் குமரேசன். இவருக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். குமரேசன் கடந்த 2018இல் கொலை செய்யப்பட்டார். மனிஷா அவரது தாய், தங்கை ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சோலைஹால் பகுதியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி மாவட்டச் செயலாளர் தினேஷ் குமார், குமரேசனின் சகோதரர் எனக் கூறி அடிக்கடி மனிஷா வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். மேலும், தன்னை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்ளுமாறு கடந்த இரண்டு வருடமாக மனிஷாவை தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், தினேஷ்குமார் தன்னுடைய கட்சி பலத்தைப் பயன்படுத்தி மனிஷாவின் குடும்பத்தினர் மீது போலீஸில் பொய் புகார் அளித்து மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மனிஷா விஷம் குடித்துஉயிரிழப்புக்கு முயன்றுள்ளார். இதைப் பார்த்த உறவினர்கள் மனிஷாவை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மனிஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தினேஷ்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிஷாவின் சகோதரி சீமாதேவி கோரிக்கை விடுத்துள்ளார்.








