பிரதமர் மோடியை ராவணனுடன் ஒப்பிட்டு பேசியதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள பெரம்புரா பகுதியில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசிய அவர் ”குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் பாஜகவினர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை காண்பித்தே வாக்கு சேகரிக்கிறார்கள். மோடி பெயரைக்கூறியே பிரச்சாரம் செய்கிறார்கள். அவருக்கு என்ன ராவணைப்போல் 100 தலையா இருக்கிறது. நகராட்சியில் ஒரு பிரச்சனை என்றால் மோடியா வந்து நிற்பார். வேட்பாளரின் பெயரைக் கூறி வாக்கு சேகரியுங்கள்” எனக்காட்டமாக கூறினார்.
இந்நிலையில் மல்லிகார்ஜூன கார்கேவின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் சம்பிட் பாத்ரா, மல்லிகார்ஜூன கார்கே தமது வார்த்தைகள் மூலம் பிரதமர் மோடியை மட்டும் அவமதிக்கவில்லை குஜராத்தையும், குஜராத்தில் உள்ள ஒவ்வொரு குடிமக்களையும் அவமதித்துள்ளார் என கண்டனம் தெரிவித்தார்.







