தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகனுக்கு இடையிலான, காதல் தொடங்கி திருமணம் வரையுள்ள வாழ்க்கை பயணத்தை விரிவாகக் காணலாம்.
மணிரத்னம் இயக்கத்தில் ’கடல்’ படத்தில் அறிமுகமான கௌதம் கார்த்திக் தொடர்ந்து வை ராஜா வை, ரங்கூன் உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் ஈர்த்தார். இதேபோல் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மஞ்சிமா மோகன், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ’அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இருவரும் இணைந்து ’தேவராட்டம்’ திரைப்படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது.
இருவருக்கும் இடையிலான காதலை முதலில் வெளிப்படுத்தியது கௌதம் கார்த்திக் தான். மஞ்சிமா மோகனின் பிறந்தநாளுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகளை கூறிய கௌதம் கார்த்திக், உன்னைப் போன்ற ஒரு வலிமையான பெண் என்னுடைய வாழ்க்கையில் இணைவதை நினைத்து மிகவும் பெருமையாக கருதுவதாகவும், எப்போதும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள் எனவும் பதிவு செய்திருந்தார். இதற்கு நன்றி GK என இதயத்துடனும் வெட்கப்படுவது போன்ற இமோஜியுடனும் மஞ்சிமா ரிப்ளை செய்திருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் காதலிப்பது உறுதியானதாக சமூக வலைதளங்களில் கட்டுரை எழுதினர்.
ஆனால் இதனை அப்போது மஞ்சிமா மோகன் ஏற்கவில்லை என தகவல் பரவியது. கவுதம் கார்த்திக்கின் காதலை தான் ஏற்கவில்லை எனவும், தனது வாழ்வில் நடக்கும் சிறு விஷயங்களையும் தான் மறைத்ததில்லை என்னும் போது, திருமணம் என்பது மிகப்பெரிய விஷயம். அதனை மூடி மறைக்க மாட்டேன் எனவும் மஞ்சிமா மோகன் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. திருமணம் குறித்த வதந்தி பரவியபோது பெற்றோரின் மனநிலை என்னவாக இருக்கும் என பயந்ததாகவும், ஆனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனவும் மஞ்சிமா மோகன் தெரிவித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தங்களது காதலை உறுதி செய்த இருவரும், திருமண தேதியை அறிவித்து தங்களது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். தன்னுடைய காதலை மஞ்சிமா மோகன் உடனே ஏற்கவில்லை எனவும், இரண்டு நாட்களுக்கு பிறகே ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார் கௌதம். சரியான நபரை சந்திக்கும் போது அவர் உன்னை உண்மையான மனிதனாக்குவார்’ என்று தனது தந்தை எப்போதும் கூறுவார் எனக்கூறிய கௌதம், தனக்கு அப்படிப்பட்ட நபர்தான் மஞ்சிமா என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இவர்களின் காதலுக்கு பெற்றோர் பச்சை கொடி காட்டியதை அடுத்து எளிய முறையில் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் நண்பர்கள் உறவினர்கள் என சிலர் மட்டுமே கலந்து கொண்டு நட்சத்திர ஜோடியை வாழ்த்தினர். இல்லற வாழ்வில் நுழைந்துள்ள புதுமண தம்பதிக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.







