“பிஜேடி,  ஒய்எஸ்ஆர்சிபி கட்சிகள் பாஜகவாகவே மாறிவிட்டன” – ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்!

பாஜகவின் ‘பி’ டீம் கட்சிகளாக செயல்பட்டு வந்த பிஜேடி, ஒய்எஸ்ஆர்சிபி ஆகிய கட்சிகள் தற்போது பாஜகவாகவே மாறிவிட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில்…

பாஜகவின் ‘பி’ டீம் கட்சிகளாக செயல்பட்டு வந்த பிஜேடி, ஒய்எஸ்ஆர்சிபி ஆகிய கட்சிகள் தற்போது பாஜகவாகவே மாறிவிட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன.  இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும்,  காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைத் தேர்தலும் நடத்தப்பட்டன.  நேற்று வெளியான தேர்தல் முடிவுகளின்படி,  ஒடிசாவில் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளம் கட்சியை (பிஜேடி) வீழ்த்தி, பாஜக ஆட்சியைப் பிடித்தது.  பிஜு ஜனதா தளம் ஒரு மக்களவைத் தொகுதிகளில்  கூட வெற்றி பெறவில்லை.

இதேபோல் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி,  ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (ஒய்எஸ்ஆர்சிபி) ஆட்சியை வீழ்த்தியது.  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 4 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் பாஜகவின் ‘பி’ டீம் கட்சிகளாக செயல்பட்டு வந்த பிஜேடி, ஒய்எஸ்ஆர்சிபி ஆகிய கட்சிகள் தற்போது பாஜகவாகவே மாறிவிட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,  “கடந்த 10 ஆண்டுகளில், பிஜேடி, நாடாளுமன்றத்தில் பாஜகவின் பி டீமாக இருந்தது.  அக்கட்சி ஒவ்வொரு பிரச்னையிலும் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்தது.
இதேபோல் கடந்த 10 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர்சிபி, பாஜகவின் மற்றொரு பி டீமாக இருந்தது.  இக்கட்சியும் ஒவ்வொரு பிரச்னையிலும் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்தது.  தற்போது இந்த இரு கட்சிகளிலும் பி டீமில் இருந்து ஏற்கெனவே தாங்கள் இருந்த அணியாகவே (பாஜக) மாறிவிட்டன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.