அமெரிக்காவின் தென் கரோலினாவில் உள்ள சம்மர்வில்லேவை சேர்ந்த பால் ஸ்லோசர் என்பவர் உலகில் உயிருடன் இருக்கும் நபர்களில் மிக நீளமான மீசை வைத்திருப்பவர் என்கிற உலக சாதனை படைத்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் வசிப்பவர் பால் ஸ்லோசர், இவர் கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி அமெரிக்கவின் காஸ்பரில் நடைபெற்ற தேசிய தாடி மற்றும் மீசை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற போது இவரது “ஆங்கில” பாணி மீசையானது 63.5 செமீ (2 அடி 1 அங்குலம்) அளவுக்கு நீளமாக இருந்ததோடு, போட்டியிலும் வெற்றி பெற்று பலரது கவனத்தையும் ஈர்த்தது. இது கிட்டத்தட்ட நான்கு மாத குழந்தையின் நீளம் ஆகும். உலகில் வேறு எந்த நபருக்கும் இவ்வளவு நீளமான மீசை இல்லை என்பதனால் தற்போது இவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளதோடு, உலகில் உயிருடன் இருக்கும் நபர்களில் மிக நீளமான மீசை வைத்திருப்பவர் என்கிற உலக சாதனையையும் படைத்துள்ளார்.
இந்த சாதனை குறித்து பால் ஸ்லோசர் பேசுகையில் தன் மனைவி கூறிய ஒரு வார்த்தையால் தான், தன்னால் இந்த சாதனை நிகழ்த்த முடிந்ததாக கூறியுள்ளார். அது எப்படியென்றால், பால் ஸ்லோசர் ஒருநாள் மீசையை கத்தரித்த பிறகு, அவரது மனைவியை முத்தமிடச் சென்ற போது , அவர் தனது கணவரை தள்ளிவிட்டு “உங்கள் மீசையை கத்தரித்த பிறகு என்னை முத்தமிடாதீர்கள். ஏனென்றால் அது கம்பி தூரிகையை முத்தமிடுவது போல் இருக்கிறது என்று கூறினாராம். அதனாலையே அன்று முதல் மீசையை கத்தரிப்பதை விட்டுவிட்டாராம்.
அதன் பிறகு டகோமாவில் ஒரு மோட்டார் சைக்கிள் ஷோவிற்குச் சென்றிருந்த பால் ஸ்லோசரிடம், அவரது மீசையை பார்த்துவிட்டு முக மூடி போட்டியில் பங்கேற்கச் சொல்லி அழைத்தார்களாம். அவரும் அப்போட்டியில் கலந்துகொண்டு சிறந்த மீசை மற்றும் சிறந்த நிகழ்ச்சிக்கான பட்டங்களை வென்றாராம். அது அவருக்கு மிகுந்த ஆச்சர்யத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கவே தொடர்ந்து 2017 முதல் உலக தாடி மற்றும் மீசை சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று வருகிறாராம்.
- பி.ஜேம்ஸ் லிசா









