பெங்களூரில் ரேபிடோ தளத்தில் பைக் டாக்சி புக் செய்த நபருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. தற்போது இந்நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் நிஷித் படேல் என்பவர் Kubernetes meetup செல்வதற்காக ரேபிடோ தளத்தில் பைக் டாக்சி புக் செய்துள்ளார். அப்போது டிரைவராக வந்தவர் சாதாரண பைக்கில் வராமல் ராயல் என்ஃபீல்ட் ஹன்டர் பைக்கில் வந்ததை கண்டு இன்ப அதிர்ச்சியடைந்த நிஷித் படேல் ஒரு நிமிடம் இது கனவா அல்லது நிஜமா என நினைத்துள்ளார். காரணம், பொதுவாக இது போன்று பைக் டாக்சி ஓட்டுபவர்கள் குறைவான விலை கொண்ட வாகனத்தை தான் இத்தகைய வேலைகளுக்கு பயன்படுத்துவார்கள்.
அப்படி இருக்க இந்நிகழ்வு நிஷித் படேலுக்கு வித்யாசமாக இருந்ததோடு, பைக் ஓட்டி வந்த நபரிடம் அவர் குறித்து விசாரித்தும் உள்ளார். அப்போது தான் நிஷித்துக்கு டிரைவராக வந்தவர் ரேபிடோ நிறுவனத்தில் DevOps என்ஜினியராக இருக்கிறார் என்றும், இவரும் Kubernetes clusters-களில் பணியாற்றுகிறார் என்பதும் தெரிய வந்துள்ளது. தான் எந்த meetup-பிற்கு செல்ல இருந்தோமோ அது தொடர்பான நபரே பைக் டாக்சி நண்பராக, அதுவும் ராயல் என்ஃபீல்ட் ஹன்டர் பைக்கில் வந்தது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்த நிஷித் படேல் அதில் “இதை யாராலும் நம்ப முடியாது, ஆனால் இந்தியாவின் டெக் தலைநகரில் இது மற்றொரு சாதாரண நாளாக இருந்தாலும், பலருக்கு இது வியப்பாக இருக்கும்” என கூறி நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா








