நிலவின் தென் துருவம் கோரமானதா? சந்திரயான்-3 எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்னென்ன?

நிலவின் தென் துருவம் கோரமானதா? சந்திரயான்-3 எதிர்கொள்ள உள்ள  சவால்கள் என்னென்ன? முழுத் தகவல் இதோ உங்களுக்காக…. தென் துருவத்தில் 100 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக சூரிய ஒளி இல்லாமல் இருளும் கற்களும் குகைகளுமாகவே…

நிலவின் தென் துருவம் கோரமானதா? சந்திரயான்-3 எதிர்கொள்ள உள்ள  சவால்கள் என்னென்ன? முழுத் தகவல் இதோ உங்களுக்காக….

தென் துருவத்தில் 100 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக சூரிய ஒளி இல்லாமல் இருளும் கற்களும் குகைகளுமாகவே உள்ளன.

இந்தியாவின் கனவு திட்டங்களில் ஒன்றான சந்திரயான் – 3 நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான் -3 விண்கலத்தை அனுப்புவதன் மூலம் விண்வெளித் துறையில் வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்தியாவும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான் – 3யின் சந்திரனை நோக்கிய பயணம் :

பூமியிலிருந்து நிலவை நோக்கி பாயும் சந்திரயான் நேர்க்கோட்டில் செல்லாமல் , பூமியை நீள்வட்டப்பாதையில் 5 முறை சுற்றி சென்றது. பூமிக்கு மிக அருகில் இருக்கும் புள்ளியை Perigree என்றும், தொலைவில் இருக்கும் புள்ளியை Apogee என்றும் அழைப்பர். 5வது சுற்றுப்பாதையில் இருந்து சந்திரயான் மீண்டும் பூமிக்கு அருகில் வரும்போது செயற்கை உந்துதலை விஞ்ஞானிகள் செலுத்துகின்றனர் . இதன் பின்னர் நிலவை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளும் சந்திரயான் – 3 பூமியின் புவியீர்ப்பு விசை இல்லாமல் செயல்பட தொடங்குகிறது. இது நேரடியாக நிலவிற்கு சென்றுவிடுமா என்றால் அதுதான் இல்லை.

பூமியை எப்படி நீள்வட்டப் பாதையில் சுற்றியதோ அதேபோல், தலைகீழாக நிலவின் பெரிய நீள்வட்டப் பாதையில் இருந்து சிறிய நீள்வட்டப் பாதையை நோக்கி சந்திரயான் சுற்றும். தொலைவின் தூரம் குறைய குறைய 100 கி.மீ. தொலைவில் ஆகஸ்ட் 17ஆம் தேதி சந்திரனிடம் விண்கலம் வந்தடையும். அதன்பிறகு, Proportion Module என்னும் உந்து சக்தியை விஞ்ஞானிகள் செயலிழக்க செய்வார்கள் . வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி விண்கலம் நிலவில் தரையிறங்க தயாராகும் .

சந்திரயான் – 3 எப்படி தரையிறங்கும் ? 
விக்ரம் லேண்டரில் 2 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் தரையிறங்கக்கூடிய இடத்தை படம்பிடித்து Artificial Intelligence-ற்கு அனுப்பிவைக்கும். அந்த புகைப்படங்களை வைத்து Artificial Intelligence எங்கு இறங்கலாம் என்று முடிவு செய்யும். தரையிறங்குவதை முடிவுசெய்யும் பொறுப்பு ( Artificial Intelligence)செயற்கை நுண்ணறிவிற்கே உண்டு. இவை அனைத்தும் திட்டமிட்டப்படி செயல்பட்டால் மாபெரும் வெற்றி. அதேபோல சந்திரயான் – 3 சூரிய ஒளி படும் இடம் அல்லாமல் ஒளிபடாத இடத்திலும் ஆராய்ச்சி செய்ய உள்ளது.

நிலவின் தென் துருவத்தில் என்ன இருக்கிறது?

தென் துருவத்தில் 100 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக சூரிய ஒளி இல்லாமல் இருளும் கற்களும் குகைகளுமே உள்ளன. அங்கு ஆய்வு செய்தால் சூரிய குடும்பத்தின் தோற்றம் குறித்து பல அரிய தகவல்கள் கிடைக்கும். அதிக கதிர்வீச்சு அபாயம் இல்லாத Helium நிலவில் கிடைக்கும். இதை பூமிக்கு கொண்டு வருவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். நிலவின் தென்துருவத்தை அடைவதற்கு பல நாடுகள் முயற்சி செய்து வருகிறது. நிலவின் வட துருவத்தைவிட தென் துருவத்தில் இறங்குவது மிகவும் சவாலான ஒன்று. இதனாலேயே, பல நாடுகள் இதனை கைவிட்டு விட்டனர்.

மகத்தான சாதனை பெறப்போகும் நாடாக இந்தியா!

சூரிய குடும்பம் உருவானபோது, தென் துருவத்தில் காந்தக்குவியல்கள் உருவாகின. வட துருவத்தில் காந்தங்கள் காணப்பட்டது இல்லை என்பதே குறிப்பிடத்தக்கது. இதனால் தென் துருவ ஆராய்ச்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. நிலவு உருவானபோது என்ன இருந்ததோ அதெல்லாம் அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதன் மூலம் பூமி எப்படி உருவானது , மனிதர்கள் எப்படி உருவானார்கள் என நாம் அறியாத , நாம் தெரிந்து கொள்ள நினைக்கும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். அதுபோல், நிலவின் ரசாயனம், மண், நீர் போன்றவைகளையும் ஆய்வு செய்யும். நிலவின் தென் துருவத்தை ISRO குறிவைக்கும் நோக்கம் இதுவே. எந்த ஒரு நாடும் தென் துருவம் வரை விண்கலத்தை அனுப்பியது கிடையாது. விஞ்ஞானிகளின் அயராத உழைப்புக்கு பலன் கிடைக்கும் வகையில், முதன் முறையாக இந்த மகத்தான சாதனையின் பெருமையை பெறப்போகும் நாடு நம் இந்தியாதான் !

சந்திரயான் – 3க்கு மிகப்பெரிய சவால்! அடுத்து என்ன?

சந்திராயன் – 2 எங்கு இறங்க திட்டமிட்டதோ அதே இடத்தில்தான் சந்திராயன் – 3 இறங்கவுள்ளது. நிலவினுடைய ஈர்ப்பு விசைக்கு போனபிறகு, சந்திரயான் – 3 விண்கலம் தனது முதல் செய்தியை பூமிக்கு அனுப்பியது. “நிலவினுடைய ஈர்ப்பு விசையை உணர்கிறேன்” ( I am feeling Lunar Gravity) என சந்திராயன் அனுப்பிய செய்தியில் தெரிவித்தது. மேலும் நிலவின் மேற்பகுதியை படம்பிடித்து அனுப்பியது. செவ்வாய்க் கோளை விட நிலவு பூமிக்கு அருகில் இருந்தாலும் நிலவில் தரையிறங்குவது அவ்வளவு சுலபம் அல்ல. நிலவின் நிலப்பரப்பில் நிலவும் மாறுபட்ட சூழல் அனைத்தையும் எதிர்கொண்டு விண்கல ராக்கெட்டை பயன்படுத்தி தான் தரையிறக்க வேண்டியிருக்கும். அதில் பெரிய சிக்கல் உள்ளதால் மிகவும் சவாலானதாக இருக்கும்.

சந்திராயன் – 3 வெற்றிகரமாக தரையிறங்கும் பட்சத்தில், அதில் இருக்கும் ரோவர் வெளியே வந்து ISRO நிர்ணயித்தபடி ஆய்வு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோவர் கருவியில் இரண்டு டயர்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒன்றில் ISRO சின்னமும் மற்றொன்றில் இந்தியாவின் அஷோக சக்கரத்தின் 4 சிங்கங்களும் பதிக்கப்பட்டுள்ளது. ரோவர் கருவி செல்லும் இடமெல்லாம் ISRO மற்றும் 4 சிங்கங்களின் சின்னங்கள் நிலவின் மேற்பரப்பில் பதித்துவிட்டே போகும்.

இந்த கடும் சவால்கள் அனைத்தையும் தகர்த்து ஆகஸ்ட் 23ஆம் தேதி விஞ்ஞானிகள் நினைத்தபடி நடந்தால், சந்திரயான் – 3 விண்கலம் ISRO-விற்கு மாபெரும் வெற்றியும் உலகமே உற்று நோக்க, சரித்திரம் படைக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறும்!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.