பீகார் எதிர்க்கட்சி கூட்டம்: வரலாறு மீண்டும் திரும்புகிறதா..?

பீகார் எதிர்க்கட்சி கூட்டம்… வரலாறு மீண்டும் திரும்புகிறதா..? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…. 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒரே அணியாக இணைந்து எதிர் கொண்டு, ஆளும் பாரதிய ஜனதா கட்சியை…

பீகார் எதிர்க்கட்சி கூட்டம்… வரலாறு மீண்டும் திரும்புகிறதா..? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்….

2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒரே அணியாக இணைந்து எதிர் கொண்டு, ஆளும் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்கான ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெற்றது. பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

எதிர்கட்சிகளின் ஒருமித்த குரல் :

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ் என இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலில் பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியை வீழ்த்தியே ஆக வேண்டும் என்கிற முனைப்புடன் தனித்தனியே தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆளுஞர் தலையீடு, இந்தி திணிப்பு, மகாராஷ்ட்ராவில் ஆட்சி கவிழ்ப்பு, அமலாக்கத்துறை விசாரணை, மேற்கு வங்கத்தில் மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை முறையாக ஒதுக்காதது, டெல்லியின் அதிகாரம் தொடர்பான அவசர சட்டம் என ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவை எதிர்ப்பதற்கான ஒருமித்த குரல் எழுந்த பின் பல்வேறு இழுபறிகளுக்கு பிறகு இந்த ஒருங்கிணைவு சாத்தியமாகியுள்ளது.

சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சிகள் :

பாஜகவிற்கு எதிராக அணிதிரண்டுள்ள எதிர்க்கட்சிகளிடத்தில் எதிராளியை அடையாளம் காணக்கூடிய அளவிலான பிரச்னைகளும் வலுவாக உள்ளன. ஆனால் அவை தூரம் ஒரு கையால் ஒசையை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாது எதிர்கட்சிகள் தங்களுக்குள்ளேயே சில முரண்பாடுகளால் முட்டி மோதிக் கொள்கின்றன. ஆரம்பத்தில் மம்தாவிற்கும் , காங்கிரஸுக்கும் இருந்த பகையில் தொடங்கி , தெலங்கானா மாநில அரசான சந்திர சேகர ராவிற்கும் காங்கிரசிற்கும் முட்டல் மோதல் போக்கு நிலவுகிறது. டெல்லி அதிகாரம் தொடர்பாக காங்கிரஸ் உரிய விளக்க அளிக்க வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளார் கெஜ்ரிவால். இப்படி ஆளுக்கொரு பக்கமாக சென்று கொண்டிருந்த எதிர்கட்சியினரை முன்பு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாள் விழாவில் ஒருங்கிணைத்தார். அதன்பின்னர் மிகப் பிரம்மாண்டமாக எதிர்கட்சிகளின் சங்கமத்தை பாட்னாவில் கூட்டியிருக்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.

எமர்ஜன்சியின் வரலாறு திரும்புகிறதா..?

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி இந்திய அரசியலமைப்பின் விதி 352ஐ பயன்படுத்தி அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தினார். ஏறத்தாழ 2ஆண்டுகள் நீடித்த எமர்ஜன்சியின் போது அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசை கேள்வி எழுப்பும் அனைவரும் நசுக்கப்பட்டனர். ஊடகங்கள தணிக்கைக்கு பின்னே தங்களது செய்திகளை பிரசுரித்தன.

எமர்ஜன்சியின் போது பல மாநிலங்களில் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. ஆனால் அவை ஒன்றிணையவில்லை. பிரிந்து கிடந்த அணிகளால் எமர்ஜன்சியை அகற்ற முடியவில்லை. பீகார் மாநிலத்தை சேர்ந்தவரான ஜெயப்பிரகாஷ் நாராயணன் எனும் ஜெ.பி அவற்றை ஒருங்கிணைத்தார். ஜெ.பி அடிப்படையில் ஒரு சுதந்திர போராட்ட வீரர். சுதந்திரத்திற்கு பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்த ஜெ.பி. 1970க்கு பின் மீண்டும் அரசியல் களம் புகுந்த அவர் எமர்ஜன்சிக்கு எதிராக அணி திரட்டினார். அதில் வெற்றியும் கண்டார். காங்கிரஸ் , இடதுசாரிகள் அல்லாத அணியை எமர்ஜன்சியை அமல்படுத்திய இந்திரா காந்திக்கு எதிராக கட்டி எழுப்பினார். ஜெ.பி.யின் முயற்சியால் எதிர்கட்சிகள் அடங்கிய புதிய கூட்டணி உருவானது. இந்திரா காந்திக்கு எதிராக போராட்டங்கள் கிளர்த்தெழுந்தன. இந்திரா காந்தி வீழ்த்தப்பட்டார். ஜனதா சர்க்கார் எனும் புதிய கூட்டணி ஆட்சி உருவானது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார்.

எமர்ஜன்சியில் உருவான தலைவர்கள்..!

இந்திரா காந்தி அவசரநிலை பிரகடணத்தை அமல்படுத்திய பிறகு ஜெ.பி. தலைமையில் அணிதிரண்ட பல தலைவர்கள் 90களுக்கு பிறகு இந்தியாவின் மிக முக்கியமான தலைவர்களாக உருவெடுத்தார்கள். தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின், பீகாரில் நிதிஷ் குமார்., லாலு பிரசாத் , உபி யில் முலாயம் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் எமர்ஜன்சியில் உருவானவர்கள்தான். ஜெ.பியின் வாரிசுகளாக அவரது ஒருங்கிணைவில் அணிரதிரண்ட லாலு, நிதிஷ் மற்றும் முலாயம் சிங் ஆகியோர் அந்தந்த மாநிலங்களின் முதல்வரானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பி.யின் வழியில் பீகாரிலிருந்து எதிர்கட்சிகளின் ஒருங்கிணைவு..!

ஜெ.பி.யின் வழியில் அவரது அரசியல் சீடர்களான நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை பாட்னாவில் ஒருங்கிணைத்துள்ளார். கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் நிதிஷ் குமாரின் கூட்டத்தில் பங்கேற்றுள்ளன. பாஜக வின் கொள்கை, அரசியல் , பத்தாண்டு கால ஆட்சி உள்ளிட்ட பிரதான பிரச்னைகளை முன்வைத்து எதிர்கட்சிகள் சித்தாந்தரீதியாக ஒன்றிணைந்ததாக சொல்லப்படுகிறது.

எமர்ஜன்சியின்போது பீகாரிலிருந்து ஒரு குரல் எதிர்க்கட்சியினரை ஒருங்கிணைத்து அவசர நிலையை அகற்றி ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது. வரலாறு மீண்டும் திரும்பும் என்பது போல அதே பீகாரிலிருந்து பாஜகவிற்கு எதிராக ஜெ.பி.யின் அரசியல் சீடர்கள் பிரம்மாண்டமாக எதிர்கட்சிகளின் ஒருங்கிணைவு வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள். நிதிஷ் குமாரின் கனவு, எதிர்கட்சிகளின் வியூகம் , பாட்னா ஒருங்கிணைவு பலன் அளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ச.அகமது, நியூஸ் 7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.