பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் புதிதாக அமைந்துள்ள மகாகத்பந்தன் கூட்டணி அரசின் அமைச்சரவை விரிவாக்கம் வரும் 16ந்தேதி நடைபெற உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க வரும் 24ந்தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோருகிறார் முதலமைச்சர் நிதிஷ்குமார்.
மகாராஷ்டிரா அரசியலில் சமீபத்தில் எதிர்பாராத அதிரடி திருப்பம் ஏற்பட்டு, பாஜக கூட்டணி அரசு மீண்டும் அமைந்தது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் பீகாரில் அதிரடி அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்த பாஜக, பீகாரில் ஆட்சியை இழந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பீகாரில் நேற்று முன்தினம் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடசாரிகள் உள்ளிட்ட மகாகத் பந்தன் கூட்டணியில் ஐக்கியமான நிதிஷ்குமார், 164 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்து ஆளுநர் பாகு சவுகானிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து நேற்று பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் 8வது முறையாக பதவியேற்றார். துணை முதலமைச்சராக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார்.
அன்று மற்ற அமைச்சர்கள் பதவியேற்காத நிலையில் வரும் 16ந்தேதி அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. மொத்தம் 35 பேர் கொண்ட அமைச்சரவை அமைக்கப்படும் என்றும் அதிக எம்.எல்.ஏக்களை கொண்ட கட்சி என்கிற அடிப்படையில் அமைச்சரவை பட்டியலில் அதிக இடம் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆட்சியில் பாஜக வசம் இருந்த முக்கிய துறைகளை ஆர்.ஜே, டிக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
பீகார் சட்டப்பேரவை சபாநாயகராக பாஜகவின் விஜய்குமார் சின்கா தற்போது உள்ளார். சபாநாயகர் மாற்றப்பட்ட பின்னரே சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் விஜய் குமார் சின்காவிற்கு எதிராக சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர 55 எம்.எல்.ஏக்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
வரும் 24ந்தேதி பீகார் சட்டப்பேரவை கூடும்போது முதலில் விஜய் குமார் சின்காவை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய சபாநாயகரை தேர்ந்தெடுத்த பின் முதலமைச்சர் நிதிஷ்குமார் நம்பிக்கை வாக்குகோருவார் என தகவல்கள் கூறுகின்றன.