தேவர் மகன் படத்திற்கு பிறகு பெரிய அரசியல் படம் என மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் வடிவேலு பேசியுள்ளார்.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் ‘மாமன்னன்’ படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ’ராசா கண்ணு’ சென்ற வாரம் வெளியானது. யுகபாரதி எழுதியுள்ள இந்தப் பாடல் வடிவேலுவின் குரலில் வெளியானது. இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில், மாமன்னன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, ரொம்ப நாள் கழிச்சு எல்லாம் வரல எங்கேயும் போகல உங்கள் செல்போனில் தான் உள்ளேன். ஒரு நல்ல கதை களத்தை இயக்குனர் அமைத்துள்ளார். இது எல்லாருடைய வாழ்க்கையிலும் கனெக்ட் ஆகும். ஏ ஆர் ரஹ்மான் தான் என்னை பாட வைத்துள்ளார். மறைந்த என் அம்மா என்னுடன் துணையாக இருந்து எனக்கு வெற்றி கொடுத்துள்ளார் என்றார்.
தேவர் மகன் படத்திற்கு பிறகு பெரிய அரசியல் படம் எனக்கு. தேவர் மகன் அரசியல் படம் கிடையாது. ஆனால் இது அரசியல் படம். படத்தில் நிறைய உள்ளது. இந்த படத்தை வைத்து 100 கதைகள் சொல்லி விட்டார்கள். சுய மரியாதை கலந்த ஒரு கதை இது. கடைசி படம் என்று சொல்ல வேண்டாம். அரசியல் நிறைய வேலை உள்ளது. அதனால் மக்கள் பணி தொடர உள்ளார்.








