மாமன்னன் வெளிவந்த பிறகு நிறைய அதிர்வுகளை ஏற்படுத்தும் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் ‘மாமன்னன்’ படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ’ராசா கண்ணு’ சென்ற வாரம் வெளியானது. யுகபாரதி எழுதியுள்ள இந்தப் பாடல் வடிவேலுவின் குரலில் வெளியானது. இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில், மாமன்னன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், எந்த மாதிரியான படம் எடுத்தாலும் அதில் சமூக நீதி இருக்க வேண்டுமென நினைப்பேன். அது போல இந்த படத்திலும் சமூக நீதி இருக்கும். இன்னும் எத்தனை படம் எடுத்தாலும் எந்த மாதிரியான ஜானரில் எடுத்தாலும் அதில் சமூக நீதிக்கான அரசியல் இருக்கும். மாமன்னன் வந்த பிறகு நிறைய அதிர்வுகளை ஏற்படுத்தும். வடிவேலுவை நீங்கள் எப்படி பார்க்க நினைத்தீர்களோ அது போல வேறு ஒரு கதாபாத்திரத்தில் பார்க்கலாம் என தெரிவித்தார்.







