ஐபிஎல் 2024 : 60 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அபார வெற்றி – பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது பஞ்சாப் கிங்ஸ்!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி…

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில்  நடைபெற்று வருகிறது. இதுவரை 57 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில் தரம்சாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்ற 58வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக் கொண்டன.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.  பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, டூ பிளசிஸ் களமிறங்கினர்.  டூ பிளசிஸ் 9 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய வில் ஜாக்ஸ் 12 ரன்களிலும் வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.இதனையடுத்து விராட் கோலி – ரஜத் பட்டிதார் ஜோடி சேர்ந்து ஆடினர்.  பட்டிதார் 21 பந்துகளில் அரை சதம் கடந்தார்.  அரை சதம் அடித்த கையோடு 55 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அரை சதம் கடந்து அசத்தினார்.  தொடர்ந்து அதிரடியாக ஆடிய விராட் கோலி  47 பந்துகளில் 92 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக ஆடிய க்ரீன் மற்றும் தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்தது.  பஞ்சாப் தரப்பில் ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டுகளும், வித்வத் கவேரப்பா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.  பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிரப்சிம்ரன் சிங் 6 ரன்களில் வெளியேறினார்.  அவரை தொடர்ந்து ரைலி ரூசோ களமிறங்கினார். அடுத்து வந்த பேர்ஸ்டோவ் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.அதிரடியாக ஆடிய ரோசோவ் 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  பின்னர் களமிறங்கிய ஷசாங்க் சிங் 37 ரன்களில் வெளியேறினார்.  பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஜித்தேஷ் சர்மா 5 ரன்களிலும், லிவிங்ஸ்டோன் 0 ரன்னிலும், கேப்டன் சாம் கரண் 22 ரன்களிலும்,  அசுதோஷ் சர்மா 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.  இறுதியில் 17 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த பஞ்சாப் அணி 161 ரன்கள் மட்டுமே எடுத்தது.

 

இதன்மூலம் பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ரூசோ 61 ரன்கள் எடுத்தார்.  பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக சிராஜ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  12 போட்டிகளில் விளையாடி 8-வது தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி, மும்பை இந்தியன்சை தொடர்ந்து நடப்பு தொடரில் 2-வது அணியாக பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.