3-வது முறையாக அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் பெமா காண்டு!

அருணாசலப்பிரதேச முதலமைச்சராக பெமா காண்டு தொடர்ந்து 3-வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். மக்களவை தேர்தலுடன் அருணாச்சல பிரதேசத்தில் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 2ம் தேதி வெளியானது.  இந்த…

அருணாசலப்பிரதேச முதலமைச்சராக பெமா காண்டு தொடர்ந்து 3-வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

மக்களவை தேர்தலுடன் அருணாச்சல பிரதேசத்தில் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 2ம் தேதி வெளியானது.  இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 60 பேரவைத் தொகுதிகளில்,  பெமா காண்டு உட்பட 10 பாஜக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாகினா்.  மீதமுள்ள 50 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்டது.

பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் கூட காங்கிரஸ்,  தேசிய மக்கள் கட்சி (என்பிபி) உள்ளிட்ட பிற கட்சிகள் களமிறங்கவில்லை.  போட்டியிட்ட 50 தொகுதிகளில் பாஜக 36 இடங்களில் வெற்றி பெற்றது.  ஏற்கெனவே போட்டியின்றி தோ்வான 10 இடங்களையும் சோ்த்து,  பாஜகவின் பலம் 46 இடங்களை கைப்பற்றியது.

தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 5 இடங்களிலும்,  தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களிலும், அருணாசல் மக்கள் கட்சி 2  இடங்களிலும்,  சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸுக்கு ஓரிடம் மட்டுமே கிடைத்தது.  இந்த நிலையில்,  அருணாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக பெமா காண்டு இன்று பதவியேற்றார்.

அவர் தொடர்ந்து 3வது முறையாக முதலமைச்சராகி உள்ளார்.  அவருக்கு ஆளுநர் கே.டி.பர்நாயக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  அவருடன் 11 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.  பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா,  ஜே.பி.நட்டா மற்றும் பாஜக கட்சியினர் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.