முசிறி அருகே, அரசுப் பள்ளி மாணவிகளை, தேனீக்கள் துரத்தித் துரத்திக் கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், தாப்பேட்டை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10, 11, 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, 200க்கும் மேற்பட்ட மாணவிகள் வந்துள்ளனர்.
அப்போது பள்ளிக்குச் செல்லும் வழியில், அரச மரத்தில் கூடுகட்டி இருந்த தேனீக்களை, அங்கிருந்த சில இளைஞர்கள் கல்வீசி கலைத்துள்ளனர். இதனால் தேனீக்கள், அவ்வழியே வந்த மாணவிகளையும், பொதுமக்களையும் துரத்தித் துரத்திக் கொட்டத் தொடங்கியது.
இதில், ஐந்து மாணவிகள் உள்பட ஏழு பேர் பாதிப்படைந்தனர். அவர்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்று, பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி கணேசன், சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். இந்நிலையில், தேனீக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று தீயணைப்புத் துறையினருக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







