இத்தலார் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில், இரவு மணமகன் வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வருகை புரிந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகை அருகே அமைந்துள்ளது இத்தலார் கிராமம். இக்கிராமத்தில்
வசித்து வரும் நீலகிரி மாவட்டத்தின் மதிமுக மாவட்டச் செயலாளர் அட்டாரி நஞ்சனின் பேரன் பவிஷிற்கு உதகையில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று இரவு திருமண நிகழ்ச்சிக்காக மணமகன் வீட்டார் அனைவரும் கல்யாண மண்டபத்திற்குச் சென்றனர். அப்போது, வனப் பகுதியில் இருந்து வெளியேறி உணவு தேடி கிராமப் பகுதிக்குள் உலா வந்த கரடி, தீடீரென அழையா விருந்தாளியாக மணமகன் வீட்டிற்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த மிக்சர், இனிப்பு பலகாரங்களை சாப்பிட்டும், காபியையும் குடித்துக் கொண்டிருந்தது.
அப்போது, வீட்டில் இருந்த வளர்ப்பு நாய் நீண்ட நேரமாக குறைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சந்தேகமடைந்து அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபோது கரடி வீட்டுக்குள் நுழைந்து உணவுப் பொருட்களை சூறையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அந்த நாய் நீண்ட நேரமாக குறைத்துக் கொண்டிருந்ததால் குடியிருப்பு
பகுதியில் இருந்து கரடி வெளியேறியது.
இந்நிலையில், திருமண நிகழ்ச்சிக்காக வீட்டில் இருந்த அனைவரும் கல்யாண
மண்டபத்திற்கு சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கிராமப்
பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் குடியிருப்புகளின் அருகே
கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத் துறையினர் கரடியை கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ம.பவித்ரா








