ரசிகர்கள் அனைவரும் மாற்றத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள எதற்கும் துணிந்தவர் திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படக் குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது.

முன்னதாக உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும் என்பதற்காக படக்குழுவினர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் சூர்யா, “எதற்கும் துணிந்த தமது ரசிகர்கள் அனைவரும் மாற்றத்திற்கு தயாராக இருக்க வேண்டுமெனக்” கூறினார். உக்ரைனில் தவிக்கும் இந்தியா மாணவர்கள் பத்திரமாக திரும்பி வருவதற்கான நடவடிக்கைகளில் அரசு சிறப்பாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே நடிகர் சூர்யாவை பார்ப்பதற்கு ரசிகர்கள் முண்டியடித்தனர். உச்சகட்டமாக ரசிகர் ஒருவர் ஆர்வத்துடன் மேடையில் ஏறிய நிலையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் வெளியேறும்படி கூறிய நிலையில், அந்த ரசிகரை அரவணைத்து நடிகர் சூர்யா புகைப்படம் எடுத்துக் கொண்டார்.








