நண்பா, நண்பி இதயங்களை கொள்ளையடிக்கும் மாஸ்டர் – “லியோ“ வின் Bday ஸ்பெஷால்!

பிரபல இயக்குநரின் மகன்.. பலதலைமுறைக்கு சேர்த்து வைக்கப்பட்ட செல்வம்.. என ஒரு நடிகனாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்க பெரிய தடைகள் எதுவுமில்லை என்றாலும், இதுவெல்லாம் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்க்க போதுமானது இல்லை…

பிரபல இயக்குநரின் மகன்.. பலதலைமுறைக்கு சேர்த்து வைக்கப்பட்ட செல்வம்.. என ஒரு நடிகனாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்க பெரிய தடைகள் எதுவுமில்லை என்றாலும், இதுவெல்லாம் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்க்க போதுமானது இல்லை என்பதை நன்கு உணர்ந்திருந்தார் நடிகர் விஜய். திரைத்துறையில் ஜெயிக்க வேறு ஏதோவென்று தேவை என்பதை உணர்ந்த நடிகர் விஜய். அந்த பாதையை நோக்கி பயணிக்க தொடங்கினார்.

யார் தன்னை கொண்டாட வேண்டும் என நினைத்தாரோ, அந்த ரசிர்களுக்கு பிடித்த மாதிரியான கதை அம்சங்களை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார். ரசிகர்களை ஆட்டுவிக்கும் நடனத்தில் கற்றுத்தேர்ந்தார். காதல், ஆக்ஷன், குடும்ப உறவுகள் என அனைத்துவிதமான படங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். வெற்றிக்கு பின்னாடி போகாத…. உனக்கு பிடிச்ச துறையை தேர்ந்தெடுத்து… அதுல உன் திறமைய வளர்த்துக்கோ…. வெற்றி உன் பின்னால் தானா வரும்…. எனும் தன்னுடைய பிரபலமான படத்தின் வசனத்திற்கு ஏற்றார்போல், இன்றைக்கு வெற்றி எனும் மூன்றெழுத்து விஜய் எனும் மூன்றெழுத்தை பின் தொடரத் தொடங்கியுள்ளது.

நடிகர் விஜயின் 30 ஆண்டுகால திரைப்பயணத்தில் அவர் சந்தித்த அளவுக்கு வெற்றியையும் தோல்வியையும் வேறு ஒரு நடிகர் சந்தித்தது உண்டா என்றால் அது கேள்விக்குறிதான். தன்னுடைய திரைப்பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களை விஜய் சந்தித்தபோதிலும், அவர் என்றைக்கும் தன்னுடைய மிகப்பெறும் பலமாக கருதுவது தன்னுடைய ரசிகர்களைதான்.

 அந்த வகையில் விஜய்யின் 67வது படத்தின் மீதே அனைவருக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் தான். நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபாஹத் ஃபாசில் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியான விக்ரம் திரைப்பட்டம், பெரும் ஹிட் அடித்ததோடு 400 கோடி ரூபாய் வசூலையும் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமான தமிழ் சினிமா templateகளை உடைத்து சினிமா எடுக்கும் புதுமுக இயக்குநர்களில் முக்கிய இடம் பெற்ற லோகேஷ் கனகராஜ், விக்ரம் திரைப்படத்தையும் அதே போன்று, தனது பாணியிலேயே எடுத்தார். இது பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, 2020ல் மாஸ்டர் படத்தின் மூலம் இணைந்த விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி, விஜய்யின் 67வது படத்தில் மீண்டும் இணைவதாக கூறப்படுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

”அறிஞர் அண்ணா, இளமையில் அன்பும் அருளும் உடையவராய் விளங்கினார். நட்பு உணர்வும், நல்ல பண்பும், அவரிடம் இயற்கையாகவே அமைந்திருந்தன”. இது தான் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் பேசிய முதல் வசனம். 1984ம் ஆண்டு, நடிகர்கள் விஜயகாந்த், விஜி ஆகியோரது நடிப்பில், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ’வெற்றி’ என்ற திரைப்படத்தில், நடிகர் விஜய் பேசிய வசனம் தான் இது.

தனது 10 வயதிலேயே, தமிழ் சினிமாவில் தடம் பதிக்க, அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தான் காரணமாக அமைந்தார். 1984ல், தான் இயக்கிய ’வெற்றி’ திரைப்படத்தின் flashback காட்சிகளில் விஜயகாந்தின் சிறு வயது கதாப்பாத்திரத்திற்கு யாரை நடிக்க வைப்பது என்று பேச்சுக்கள் எழுந்தபோது, தனது மகன் விஜய்யையே நடிக்க வைக்க முடிவு செய்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். படத்தில் தந்தையை இழந்த மகனாக, நீதிமன்ற கூண்டில், 10 வயது சிறுவன் விஜய் பேசும் வசனம், ஆக்ரோஷமாகவே இருக்கும்.

இதன் பின்னர், நான் சிகப்பு மனிதன், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி போன்ற பல படங்களில் குழந்தை கதாப்பாத்திரமாக நடிக்க தொடங்கினார் விஜய். மகனுக்கு மிகப்பெரிய மருத்துவமனை கட்டி கொடுத்து அதில் டாக்டர். விஜய் என்ற பெயருடன், விஜய்யை மருத்துவராக்க வேண்டும் என்பதே தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் கனவாக இருந்தது. ஆனால், ’தனக்கு நடிப்பதில் தான் ஆசை இருக்கிறது’ என விஜய் கூறியதும், பெற்றோருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இரவு முழுவதும் விஜய்க்கும் பெற்றோருக்கும், பெரும் வாக்குவாதம் ஆக, மறுநாள் காலையில், வீட்டில் விஜய் இல்லை என்ற அதிர்ச்சி செய்தி வந்தது. ‘நான் வெளியே செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்’ என கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார் விஜய். தாய் ஷோபா சந்திரசேகர் பதறிபோக, தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரோ “பதராதே, உதயம் தியேட்டரில் தான் இருப்பான். அழைத்து வருகிறேன்” எனக் கூறி இருக்கிறார். தந்தை கூறியது போலவே, உதயம் தியேட்டரில் கிழக்குக்கரை படம் பார்த்துக்கொண்டிருந்தார் விஜய். கண்டுபிடித்ததும் “வா போகலாம்” என தந்தை அழைக்க, “இங்க கூட என்ன நிம்மதியா இருக்க விடமாட்டீங்களா?” என அரை மனதுடனே வீட்டிற்கு சென்றுள்ளார் விஜய்.

’அண்ணாமலை’ ரஜினி பேசிய வசனத்தை, விஜய் தன்னிடம் பேசி காட்டியதை எல்லாம் நினைத்துப்பார்த்த தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ’மகன் சினிமாவின் மீது இத்தனை ஆர்வமாய் இருக்கிறான். அவனுக்கு நிச்சயம் ஒரு இடத்தை அமைத்து தர வேண்டும்’ என முடிவு செய்தார். விஜய்க்கு என பிரத்யேகமாக ஒரு photoshoot எடுத்து, தனது தயாரிப்பில் பெரும் இயக்குநரை வைத்து மகனை அறிமுகம் செய்யலாம் என முடிவு செய்து, பல இயக்குநர்களின் வீடுகளுக்கு சென்றுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். ஆனால், விஜய்யை வைத்து படம் இயக்க யாரும் முன் வரவில்லை. இறுதியாக தானே விஜய்யை அறிமுகப்படுத்துவது என முடிவு செய்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். 1992ம் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் விஜய்.

“யார் இவன்? இவனெல்லாம் நடிகனா? இந்த மூஞ்சையெல்லாம் டிக்கெட் வாங்கி பார்க்க வேண்டுமா?” என விஜய்யின் தோற்றம் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இது விஜய்யின் காதுகளுக்கும் சென்றது. ஆனால், இதையெல்லாம் கேட்டு துவண்டுபோகவில்லை. தனது திறமையை நிரூபித்தே ஆக வேண்டும் என தீர்க்கமாக இருந்தார். மறுபுறம், ஒரு பெரிய நடிகரை வைத்து, தனது மகனை மேலும் பலரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எண்ணிய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், 1993ம் ஆண்டு நடிகர் விஜயகாந்துடன், விஜய்யை இணைத்து செந்தூரப்பாண்டி என்ற படத்தை உருவாக்கினார்.

அது பெரும் வரவேற்பையும் பெற்றது. அதன் பின் ரசிகன், தேவா ஆகிய படங்களை தந்தையே இயக்க, ராஜாவின் பார்வையிலே படத்தில் ஜானகி சவுந்தர் என்ற புதிய இயக்குநருடன் இணைந்தார் விஜய். இந்த படம் தான், விஜய், அஜித் ஆகியோர் இணைந்து நடித்த படமாகும். இந்த இணைப்பு மீண்டும் எப்போது நடக்கும் என்பதே தற்போது வரையிலும் அனைவரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது. பல படங்களுக்கு பிறகு, 1996ல் வெளியான ’பூவே உனக்காக’ திரைப்படம் தான் விஜய்யை ஸ்டார் நடிகராக மக்கள் மனதில் கொண்டு சேர்த்தது. 1994ல் வெளியான ’ரசிகன்’ படத்தில் விஜய்க்கு அளிக்கப்பட்ட இளைய தளபதி பட்டம், பூவே உனக்காக படத்திற்கு பின்னர் தான் தமிழ்நாடெங்கும் பிரபலமானது. விஜய் ரசிகர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது.

லவ் டுடே, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, பிரியமானவளே, பத்ரி என காதல் ததும்பும் பல ஹிட் படங்களை கொடுத்து வந்த விஜய், பகவதி படத்திற்குப்பின் முழு நேர ஆக்ஷன் ஹீரோவாக மாறினார். திருமலை, கில்லி, போக்கிரி, துப்பாக்கி, கத்தி, மாஸ்டர், பீஸ்ட், வாரிசு என தனது வளர்ச்சியை எந்த அளவுகோலையும் வைத்து அளக்க முடியாத அளவு, தற்போது உயர்ந்து நிற்கிறார். கில்லி மூலம் தமிழ் சினிமாவின் முதல் 50 கோடி வசூல் படத்தையும், துப்பாக்கி மூலம் முதல் 100 கோடி வசூல் படத்தையும் கொடுத்தது விஜய் தான். இப்போதும் படத்திற்கு படம், வசூலும், வரவேற்பும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது.

மூன்று முறை தமிழ்நாடு அரசு விருது, 2007ல் டாக்டர் பட்டம், 2018ல் பிரிட்டனில் சர்வதேச விருது என அடுத்தக் கட்டத்திற்கு தன்னை முன்னேற்றிக்கொண்டே இருந்தார் விஜய். எத்தனை உயரம் சென்றாலும், அதனை பெரிதும் வெளிகாட்டிக்கொள்ளாத ”மிகவும் அமைதியான, சாந்தமான நபர் விஜய்” என்ற பெயரையே பெற்றுள்ளார். இந்த அமைதிக்கு, ஒரு பின்கதையும் உண்டு. தனது பள்ளி பருவத்திலிருந்தே மிகவும் சுட்டித்தனமான பையனாகத் தான் வளர்ந்தார் விஜய்.

அவருக்கு பள்ளியில் ‘godly boy’ என்ற பெயரும் உண்டு. guitar கற்பது, handball விளையாடுவது, போட்டிகளில் பங்கேற்க வடநாடு செல்வது என கலகலப்பாகவே வளர்ந்த சிறுவன் விஜய், தனது தங்கை வித்யாவின் இறப்பிற்கு பின்னரே அமைதியான நபராக மாறினார். “வித்யா” என்று சப்தமாக அழுததோடு அவரது குரலின் வலிமை அடங்கி, சாந்தமாக மாறிவிட்டார் விஜய்” என்று ஒரு பேட்டியில் தெரிவிக்கிறார் தாயார் ஷோபா சந்திரசேகர். ஆனால், விஜய் எப்போதும் அமைதி காத்துக்கொண்டு மட்டுமே இருந்ததில்லை. 

pan india, pan world என பல பாடங்களை இதர மொழி சினிமா துறையினர் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். அதையெல்லாம் விஜய் போன்ற முன்னணி நடிகர்களால் மட்டுமே முறியடிக்க முடியும் என்பதே தமிழ் சினிமா ரசிகர்கள் நம்பிக்கையாக இருக்கிறது. நெல்சன், லோகேஷ் கனகராஜ் போன்ற மாற்று சிந்தனை இயக்குநர்களுடன் இணைவதன் மூலம், அந்த நம்பிக்கைக்கான விதையை விஜய் விதைத்துவிட்டார் என்றே கூறவேண்டும்.

நடிகர்களுக்காக இயக்குநர்கள் கதையை மாற்றும் காலம் மறைந்து, கதைக்கு ஏற்றவாறு முன்னணி நடிகர்கள் தங்களை மாற்றிக்கொள்ள தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதற்கான ஆரம்பப்புள்ளியாக விஜய் இருப்பார் என அனைவரும் எதிர்பார்க்கக் காரணம், அதற்கான முழு தகுதியும் திறமையும் கொண்டவர், தளபதி என செல்லமாக பெயரெடுத்த நடிகர் விஜய் என்பதனால் தான்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.