விஜய்யின் மாஸ்டர் பிளான் -அரசியல் பிரவேசத்தின் அடுத்த கட்டம்…

கல்வியே அழியாத செல்வம்…என்று மாணவர்களை ஊக்கப்படுத்தியுள்ள நடிகர் விஜய். இளைய தலைமுறையின் வாக்குகளை குறிவைத்து களமிறங்குகிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில், அவரது அரசியல் பயணத்தின் அடுத்த கட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்… அரசியலுக்கு…

கல்வியே அழியாத செல்வம்…என்று மாணவர்களை ஊக்கப்படுத்தியுள்ள நடிகர் விஜய். இளைய தலைமுறையின் வாக்குகளை குறிவைத்து களமிறங்குகிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில், அவரது அரசியல் பயணத்தின் அடுத்த கட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்…

அரசியலுக்கு வருகிறேன் என்று 25 ஆண்டுகளுக்கு மேல் சொல்லி வந்த ரஜினிக்காந்த், அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடு ஒதுங்கி விட்டார். சொன்னபடி அரசியலுக்கு வந்து எதிர்க்கட்சித் தலைவர் வரை உயர்ந்த விஜயகாந்த், உடல் நலக்குறைவால், வேகம் குறைந்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கினார். மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல் என தனித்து களமிறங்கி பார்த்தார். தற்போது, திமுக கூட்டணியில் கை கோர்த்துள்ளார். இந்நிலையில், தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக உள்ள விஜய் விரைவில் அரசியலுக்கு வருகிறார். இதற்கான ட்ரைலர்தான் ஜூன் 17ம் தேதி வெளியாகியுள்ளது என்று உரக்கச் சொல்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

விஜயின் சொல்லும் செயலும்

அரசியலுக்கு வருகிறேன் என்று இதுவரை விஜய் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், விழாக்களில் அவர் பேசும் பேச்சு, திரைப்படத்தில் அவர் பேசும் வசனங்கள் அதற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டன என்கிறார்கள். குறிப்பாக மாணவர்களுக்கு விருதும் விருந்தும் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தின், கல்வி விழாவில், விஜயின் பேச்சு. கல்வி, யதார்த்தம், தன்னம்பிக்கை என்று பேசிய அவர் அரசியலையும் தொட்டுப்பார்த்துள்ளார். மிகவும் கவனமுடன் தயாரிக்கப்பட்ட உரையை பக்குவமாக எடுத்துரைத்துள்ளார். விழாவையும் நேர்த்தியாக நடத்தி அசத்தினர். விஜயின் அன்றைய சொல்லும் செயலும் அரசியல் களத்திலும் கவனத்திற்குள்ளாகியுள்ளது.

விஜய் பேசிய அரசியல்

குறிப்பாக, ஐன்ஸ்டீனில் தொடங்கிய விஜய, அட்வைஸ் பண்ணலை என்று சொல்லி விட்டு, ‘’நம்ம விரலை வைத்தே நம்ம கண்ணை குத்துகிறார்கள். ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று பெற்றோர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜரைப் படியுங்கள். எதற்காகவும் நல்ல குணத்தை இழந்து விடாதீர்கள்…’’ என்றெல்லாம் விஜய் பேசியுள்ளார். இந்த பேச்சில்தான் தனது அரசியல் பாதை, கொள்கையை குறியீடாக குறிப்பிட்டுள்ளார். மாணவர்களோடு பங்கேற்ற கல்வி விழா தந்த உற்சாகத்தில் அடுத்தடுத்த செயல்திட்டங்களையும் நிறைவேற்ற உள்ளார் என்கிறார்கள். விழாவிற்கு வந்த மாணவி ஒருவர் ’’நீங்க அரசியலுக்கு வர வேண்டும். என்னுடைய வாக்கை மதிப்புள்ளதாக்க விரும்புகிறேன்’’ என்ற மாணவியின் பேச்சையும் குறிப்பிட்டு சொல்கிறார்கள். மாணவர்கள் விஜயின் அரசியலை விரும்புகிறார்கள் என்பதை சொல்ல வைத்த தருணம் அது என்கிறார்கள்.

வலுவான அரசியல் அடித்தளம்

கல்விக்கு முக்கியத்துவம், சமூக நீதி, ஊழலற்ற ஆட்சி என்கிற அடிப்படையில், தேசிய பார்வையுடன் கூடிய திராவிட இயக்க ஆட்சியாக அவரது அரசியல் இருக்கும். விஜயின் அரசியல் பயணம் என்பது 2026ம் ஆண்டு அல்லது அதற்கு பிறகுதான் இருக்கும். அதுவரை கட்சிக்கான அடித்தளத்தை மக்கள் இயக்கம் மூலம் பலமாக அமைப்பார். திரை வெளிச்சம் மட்டுமே இன்றைய அரசியலுக்கு உதவாது என்பதால், விஜயகாந்த் போல் தனது மக்கள் இயக்கம் மூலம் நற்பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவார்கள் என்கிறார்கள். மருத்துவ முகாம், விலையில்லா உணவகம் என அவரது மக்கள் மன்றத்தின் நலப் பணிகளையும் விரிவாக்கி வருகின்றனர். குறிப்பாக ரசிகர் மன்றங்களை கிளைக் கழகங்களாக்கிய எம்.ஜி.ஆரின் அணுகுமுறையும் குறிப்பிட்டு சொல்லப்படுகிறது.

தலைவர்கள் பார்வை

விஜயின் அரசியல் வருகை குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளனர்.

மாணவர்களுக்கு உதவி செய்வதை வரவேற்கிறோம். அதையே அரசியலுக்கு பயன்படுத்தினால் ஏற்க முடியாது என்றும் சிலர் கருத்து சொல்லியுள்ளனர். சிலர் கருத்து சொல்வதை தவிர்த்தும் வருகின்றனர். ஆனால், அனைத்து தலைவர்களும் விஜயின் நகர்வுகளை கவனித்துக் கொண்டுதான் உள்ளனர் என்கிறார்கள்.

இளைய தலைமுறையே இலக்கு

நாற்பது அல்லது நாற்பது வயதைக் கடந்தவர்கள் ஏதாவது ஒரு கட்சியில் அல்லது கட்சி சார்ந்து இருப்பார்கள். அவர்களை அப்ப பார்த்துக்கலாம். இப்ப, நாளைய வாக்காளர்களாகிய மாணவர்கள், இளைஞர்களை தன்பக்கம் ஈர்க்கும் முயற்சியில், விவேகத்துடன் விஜய் காய் நகர்த்தி வருகிறார். மாநில அரசியலை நோக்கி, 234 தொகுதிகளையும் குறி வைத்து களமிறங்கி உள்ளார். அவரது அண்மைக்கால செயல்பாடுகள் அதை தெளிவாக காட்டுகின்றன, அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தடம் பதித்துள்ளனர். தொகுதிவாரியாக தொண்டரணி, இளைஞரணி என பல்வேஸு அணிகளையும் அமைத்துள்ளனர் என்கிறார்கள்.

திரையிலிருந்து மீண்டும் ஒரு தலைவரா?

திரையில் உலகில் உச்சம் தொட்டது போல், அரசியலிலும் சாதிப்பாரா விஜய்? நடிகர் விஜய் தலைவர் விஜய் ஆவாரா? மாண்புமிகு மாணவனின் சர்க்கார் அமையுமா? விஜயின் ’மாஸ்டர்’ பிளான் வொர்க் அவுட் ஆகுமா? திரையில் இருந்து மீண்டும் ஒரு தலைவரா…? காத்திருப்போம்…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.