தேனி மாவட்டம், சுருளி அருவியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால்
சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர்தடை விதித்துள்ளனர்.
தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. கோடை விடுமறையின்
சிறந்த சுற்றுலா தளமாக உள்ள இப்பகுதிக்கு, வெளி மாநிலம் மற்றும் பிற
மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது
வழக்கம். தற்பொழுது கோடை காலம் நிலவுவதால் சுற்றுலா பயணிகளின்
வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சுருளி அருவிக்கு செல்லும்
சாலையில் மரக்கிளை முறிந்து விழுந்த விபத்தில், சென்னையைச் சேர்ந்த பெமினா
என்ற பள்ளி மாணவி உயிரிழந்தார். மேலும், இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல்
இருப்பதற்காக, வனத்துறையினர் சுருளி அருவியில் குளிப்பதற்கு தடை விதித்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து, பழமையான அரிய வகை மரங்களில் காய்ந்து நிற்கும் மரக்கிளைகள்
மற்றும் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் உள்ள மரங்களை வெட்டி,
பராமரிப்பு பணிகளை செய்து சாலை சீரமைப்பு பணிகளை நடத்தி வருகின்றனர்.
இதனால், சுருளி அருவிக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல்
ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
மேலும், பராமரிப்பு பணிகள் நடைபெறும் வரை சுருளி அருவியில் சுற்றுலா
பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்திருப்பதாகவும் கூறிய நிலையில் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற வேண்டாம் எனவும், வனத்துறையினர்
தகவல் தெரிவித்துள்ளனர்.
-கு. பாலமுருகன்







