சுருளி அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி..!

தேனி மாவட்டம், சுருளி அருவியில் இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருக்கும். இந்த…

தேனி மாவட்டம், சுருளி அருவியில் இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருக்கும். இந்த அருவியில் குளிப்பதற்காக நாள்தோறும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த சுருளி அருவி வனப்பகுதிகளில் யானை, காட்டெருமை, மான், கரடி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பது வழக்கம்.

அதே போல் கடந்த 2-ம் தேதி 2 குட்டிகளுடன் 8 யானைகள் சுருளிஅருவிக்கு செல்லும் வழியில் முகாமிட்டது. யானைகளின் நடமாட்டத்தை பார்த்த வனத்துறையினர் அருவியில் குளிக்க மற்றும் வளாகப்பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதியளிக்கவில்லை.

7 நாள்களாக முகாமிட்ட யானைக்கூட்டம் இன்று அதிகாலை உள் வனப்பகுதிக்கு சென்றது. யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்த வனத் துறையினர் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை குளிக்க அனுமதியளித்தனர். சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியுடன் குளித்து சென்றனர்.

இதுபற்றி கம்பம் கிழக்கு வனச்சரகர் பிச்சைமணி 7 நாட்களுக்கு பின் யானைக்கூட்டம் உள் வனப்பகுதிக்கு சென்றுள்ளதாகவும், அதனால் பொதுமக்களுக்கு குளிக்க அனுமதி தரப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆனாலும் அருவியின் வளாகப்பகுதி, தேக்கங்காடு, வெண்ணியாறு செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் வன ஊழியர்கள் கண்காணிப்பு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.