சென்னையில் மரம் முறிந்து விழுந்ததில் வங்கி மேலாளர் பலி

சென்னை கே.கே நகரில் மரம் முறிந்து விழுந்ததில் வங்கி மேலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஈரப்பதம் அதிகரித்துள்ளது.…

சென்னை கே.கே நகரில் மரம் முறிந்து விழுந்ததில் வங்கி மேலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. சென்னையிலும் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 136க்கு உட்பட்ட லட்சுமணசாமி சாலை, பி.டி ராஜன் சாலை சந்திப்பில் 50 ஆண்டு பழமையான சுமார் 5 அடி விட்டமுள்ள மரம் ஒன்று நேற்று (ஜூலை 25) மாலை சுமார் 6 மணியளவில் சாய்ந்தது.

இம்மரம் சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மீது விழுந்துள்ளது. இதனால் காரில் பயணித்த சுமார் 55 வயது மதிக்கத்தக்க வாணிகபிலன் என்பவர் படுகாயமடைந்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார்.

இந்த மரம் விழுந்த சம்பவ இடத்தில் கடந்த இரண்டு நாட்களாக மண் தோண்டும் பணி உட்பட எவ்வித மழைநீர் வடிகால் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என மாநகராட்சி சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ளும் பொழுது மரம் இருப்பதன் காரணமாக 10 அடிக்கு முன்னதாகவே பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாகவும், மண்ணின் ஈரத்தன்மை காரணமாகவும் பழமை வாய்ந்த இம்மரம் சாய்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணையை மேற்கொள்ள இந்திய ஆட்சிப் பணி நிலையில் உள்ள துணை ஆணையாளர் (பணிகள்) மற்றும் மத்திய வட்டார துணை ஆணையாளர் ஆகியோருக்கு ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

மழை காரணமாக மரம் சாய்ந்து விழுந்ததில் வங்கி மேலாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.