பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதை தொடர்ந்து, உலக அளவில் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக பெய்து வந்த கனமழை காரணமாக இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, கடந்த ஓராண்டில் சில்லறை விற்பனையில் அரிசி விலை 11.5 சதவீதம் அதிகரித்திருந்த
நிலையில், இந்த எதிர்பாராத பருவகால மாற்றங்களால் கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே அரிசி விலை 3 சதவீதம் அளவு உயர்ந்துள்ளது.
இந்நிலையில், பண்டிகை காலம் வருவதால் உள்நாட்டில் அரிசிக்கான தேவையும் அதிகரிக்கும், இதனால் அரிசியின் விலை மேலும் உயரலாம் என நிபுணர்கள் எச்சரித்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் அரிசி தங்கு தடையின்றி கிடைக்க பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு சில தினங்களுக்கு முன் தடை விதித்திருந்தது.
இந்தியாவின் இந்த நடவடிக்கையால் உலக அளவில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, பல ஆசிய நாடுகளின் அரிசியின் விலைகள் உலகச் சந்தைகளில் உயர்ந்துள்ளது. காரணம், உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும் அரிசியில் 40 சதவீதம் இந்தியாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதால் தான். இதனால், உலகின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய அரிசி ஏற்றுமதியாளர்களான தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் கிட்டத்தட்ட 5% அளவிற்கு அரிசியின் விலைகளில் உயர்வை சந்தித்துள்ளன. அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பணக்கார நாடுகள் இந்த விலை உயர்வை சமாளித்தாலும், இந்தியாவின் தடையால் ஆப்பிரிக்கா, துருக்கி, சிரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நாடுகளில் ஏற்கெனவே பணவீக்கம் அதிகமாக இருக்கும் சூழலில், இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடை உத்தரவு மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதோடு, வெளிநாடுவாழ் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் நாடுகளுக்கும் அரிசி மிக முக்கியமாக தேவைப்படுவதால் சர்வதேச அளவில் மிக பெரிய உணவு தட்டுப்பாடு சிக்கலை இந்நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே மாஸ்கோ கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதால் உலக நாடுகள் கோதுமை விலை ஏற்றத்தால் சிக்கி தவித்து வரும் சூழலில், இந்தியாவின் இந்த அறிவிப்பு உலக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே போல் கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட சர்வதேச பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வந்த சூழலில், உக்ரை-ரஷ்யா போர் மற்றுமொரு பொருளாதார தாக்கத்தை சர்வதேச அளவில் ஏற்படுத்தியது. இதன் காரணமாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணவீக்கம் வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டிருந்த நிலையில், தற்போதுதான் படிப்படியாக இயல்பு நிலைக்கு திருப்பி கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில் இந்தியாவின் இந்த அறிவிப்பால் சர்வதேச அளவில் மீண்டும் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த தடை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் ஆராய்ச்சி பிரிவின் தலைவர் டேனியல் லெய் பேசும் போது “உலகம் முழுவதும் பணவீக்கம் குறைந்து வரும் சூழல் நிலவுகிறது. இப்படிப்பட்ட நேரத்தில் இந்தியாவில் மட்டுமின்றி வேறு பல
நாடுகளிலும் இதுபோன்ற கட்டுபாடுகள் கொண்டு வரப்படுவதற்கான காரணங்களை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தாலும், இதனால் ஏற்படும் தாக்கத்தால் உலக அளவில் விலைவாசி உயருமே தவிர குறையாது, அதேபோல் பணவீக்கமும் நிச்சயம் உச்சத்தை தொடும். இதனால் படிப்படியாக இந்த கட்டுப்பாடுகளை இந்தியா நீக்க வேண்டும்” என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா








