பக்ரித் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றை வலியுறுத்துகிறது. அப்படியான பக்ரித் திருநாளுக்குத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘இசுலாமிய மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரித் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பக்ரித் திருவிழா – தியாகம் மற்றும் பக்தியின் உயர்வைக் குறிக்கிறது. பக்ரித் கொண்டாட்டங்கள் ஈகை, சகோதரத்துவம், சேவை எண்ணங்களை வலுப்படுத்துவதாக நம்பப்படுகிறது. சமுதாயத்தில் அமைதி. நல்லிணக்கம். இரக்கம், நட்பு போன்றவற்றை உயர்த்திப் பிடிப்பதே உண்மையான பக்ரித் கொண்டாட்டங்களின் நோக்கம். அனைவருக்கும் எனது பக்ரித் நல்வாழ்த்துக்கள்’ என அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘இந்தியராய், இஸ்லாமியராய் வாழும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் தமிழ்நாடு பாஜக சார்பில் மனமார்ந்த பக்ரித் நல்வாழ்த்துகள்’ என அவர் கூறியுள்ளார்.
’தியாகப் பெருநாளாம் பக்ரீத்தைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். இறைத் தூதரான நபிகள் நாயகம் காட்டிய வழியில், சகோதரத்துவம், சமாதானம், ஈகை, மனிதநேயத்துடன் பயணித்து, அனைவரிடமும் அன்பு செலுத்துவோம். இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் உதவுவோம். உலகில் அமைதியும், மகிழ்ச்சியும் தழைக்கப் பாடுபடுவோம். மொழி, இனம், தேசம் என்ற எல்லைகளைத் தாண்டி, உலகம் முழுவதும் நட்பு பாராட்டுவோம். மதம், சாதி, கலாச்சாரத்தை முன்னிறுத்தி, நம்மைப் பிரிக்க நினைப்பவர்களிடமிருந்து ஒதுங்கி, ஒற்றுமையே வேற்றுமை என்ற இந்தியப் பண்பாட்டை நிலைநிறுத்துவோம்’ என மக்கள் நீதி மய்யம் பக்ரித் வாழ்த்து தெரிவித்துள்ளது.
தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கொரோனா பெருந்தொற்று முற்றிலும் ஒழிய இந்நாளில் அனைவரும் இறைவனைப் பிராத்திப்போம். தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளான பக்ரீத் திருநாளை உலகம் முழுவதும் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.








