மகள்களை பெற்ற அப்பாக்களுக்கே சமர்ப்பணம் – தோர் லவ் அண்ட் தண்டர்

தன்னுடைய மகளை உரிய நேரத்தில் காக்க மறந்த கடவுள்களை பழிவாங்கும் கோர் என்னும் தி காட் புட்ச்சர். மகளின் இறப்புக்காக கடவுள்களை பழிவாங்கினாரா அல்லது கடவுள் அவரை நல்வழிப்படுத்தினாரா என்பது தான் தோர் லவ்…

தன்னுடைய மகளை உரிய நேரத்தில் காக்க மறந்த கடவுள்களை பழிவாங்கும் கோர் என்னும் தி காட் புட்ச்சர். மகளின் இறப்புக்காக கடவுள்களை பழிவாங்கினாரா அல்லது கடவுள் அவரை நல்வழிப்படுத்தினாரா என்பது தான் தோர் லவ் அண்ட் தண்டர் திரைப்படத்தின் கதை.

தோர் கதாப்பத்திரத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடித்துள்ளார். நடித்துள்ளார் என்று சொல்வதை விட அந்த கதாப்பத்திரமாகவே மாறியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு முந்தைய பாகங்களின் தொடர்ச்சியாக தோரின் முந்தைய வாழ்க்கை மற்றும் உறவுகளை விளக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டு இந்த பாகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தோரின் காதலியாகவும் புதிய தோர் கதாப்பாத்திரமாகவும் நடாலி போர்ட்மேன் நடித்துள்ளார். பல இடங்களில் தோரை விட நடாலி சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதிலும் புதிய தோர் உடையில் தோரை போலவே ரசிகர்களையும் ஈர்த்துள்ளார். அந்த அளவிற்கு அவரது நடிப்பு சிறப்பாக உள்ளது. இந்த படத்தின் வில்லனான தி காட் புட்ச்சர் கதாப்பத்திரத்தில் கிறிஸ்டியன் பேல் நடித்துள்ளார். இதற்கு முன்பு அவர் நடித்த பேட் மேன் கதாப்பாத்திரம் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரெட்டாக இருந்து வருகிறது. ஆனால் இந்த படத்தில் கிறிஸ்டியன் பேலை பெரிய அளவில் பயன்படுத்தவில்லை என்ற எண்ணம் தோன்றுகிறது.

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற முக்கியம் காரணம் அந்த படத்தின் வில்லன் கதாப்பாத்திரமான தனொஸ் தான். அப்படி ஒரு வெயிட்டான கதாப்பாத்திரமாகவே தி காட் புட்ச்சர் இருக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே மிச்சம் என்று சொல்ல வேண்டும். கிறிஸ்டியன் பேல் தானா இது என்று தெரியாத அளவிற்கு அவரது தோற்றம் சற்று வித்தியாசமாகவே உள்ளது. இது தவிர்த்து டெஸ்சா தாம்ப்சன், ரசல் குரோவ் போன்ற பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இதற்கு முன்பு வெளியான தோர்: ரக்னராக்கை இயக்கிய டைக்கா வைட்டிட்டி தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். காதல், குடும்ப உறவு, காமெடி என இந்த படத்தில் நிறைய காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சில இடங்களில் அவை நம்மை பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்பதையும் சொல்ல வேண்டும். தமிழ் படங்களைப் போல பேசிக்கொண்டே இருக்கும் சில காட்சிகள் சலிப்பையே ஏற்படுத்துகிறது. மொத்தத்தில் தோர் – லவ் அண்ட் தண்டர் பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்பதே உண்மை.

– தினேஷ் உதய் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.