முஸ்லிம்களின் முதன்மையான இரு பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை எனப்படும் ஹஜ்ஜுப் பெருநாள் இந்தியா முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகை ஜூன் 29-ம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாஹுத்தின் முகமது அய்யூப் கடந்த ஜூன் 19ம் தேதி அறிவித்திருத்தார். நேற்று உலகம் முழுக்க கொண்டாடப்பட்ட பக்ரீத் பண்டிகை பிறை தென்படாததால் இந்தியாவில் இன்று கொண்டாடப்படுகிறது.
பக்ரீத் பண்டிகையின் சிறப்புகள் என்ன.?
இந்தியாவில் பரவலாக பக்ரீத் பண்டிகை என அழைக்கப்பட்டாலும் இந்த பண்டிகையை “ஹஜ் பெருநாள்” என தமிழிலும் ஈதுல் அல்ஹா என அரபியிலும் அழைக்கப்படுகிறது. ஈதுல் அல்ஹா என்பதற்கு தியாகத் திருநாள் என பொருள்.
கிருஸ்துவ பிறப்பிற்கு சுமார் 2000ம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இறைத்தூதர் இபுறாஹிம் நினைவாக உலகம் முழுக்க பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இறைதூதர் இபுறாஹிமின் இறைநம்பிக்கையை இறைவன் சோதித்து பார்க்க விரும்பினான். அதன்படி அவருக்கு அடுக்கடுக்கான பல சோதனைகளை கொடுத்தான். பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த இபுறாஹிமுக்கு இஸ்மாயில் எனும் குழந்தையை வழங்கினான். அதன்பின்னர் குழந்தையையும், மனைவியையும் அரேபிய பாலைவனத்தில் கொண்டுபோய் விட வேண்டும் என இறைவன் கட்டளை பிறப்பித்தான். அதனை அப்படியே ஏற்று இபுறாஹிம் கடைபிடித்தார்.
அதன்பின்னர் ஆசைஆசையாக வளர்த்த மகனான இஸ்மாயிலை அறுத்து பலியிடுவது போன்ற கனவு கண்டார் இறைதூதர் இப்றாஹிம். இறைதூதர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து வஹி எனப்படும் செய்தி இரண்டு வழிமுறைகளில் வருவதுண்டு. ஒன்று கனவின் மூலம் மற்றொன்று தேவதூதர்கள் எனப்படும் வானவர்கள் மூலம். எனவே இது இறைவனின் கட்டளையாக இருக்குமோ என நினைத்த இபுறாஹிம் இந்த கனவு குறித்து தனது மகனிடமே தெரிவித்தார். மகன் இஸ்மாயில் மிக பக்குவமாக “தந்தையே இது இறைவனின் கட்டளை எனில் நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். என்னை பொறுமையாளர்களில் ஒருவராக காண்பீர்” என தெரிவித்தார். அதன்படி இபுறாஹிம் கூரான கத்தியை எடுத்து இஸ்மாயிலை அறுத்து பலியிட முனைந்த போது இறைவன் அவரது தியாகத்தை ஏற்று பலியிட வேண்டாமென தடுத்தான். அதன் பின்னர் தேவதூதர் ஜிப்ரயீல் மூலம் சொர்கத்தில் இருந்து ஒரு ஆட்டை பரிசளித்து அதனை அறுத்து ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் உணவளியுங்கள் என இறைவன் தெரிவித்தான்.
இறைதூதர் இபுறாஹிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும் அதனை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்தும் வகையில் இந்த பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஹஜ் பெருநாளின் முக்கிய நிகழ்வுகள் :
ஹஜ் பெருநாளின்போது இரண்டு முக்கிய நிகழ்வுகள் கடைபிடிக்கபடுகிறது. ஒன்று ஹஜ் எனப்படும் மக்காவிற்கு செல்லும் புனித பயணம். மற்றொன்று குர்பானி எனும் அறுத்து பலியிடுதல்.
மக்காவிற்கு புனித பயணம் :
இறைதூதர் இபுறாஹிமின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இஸ்லாமியர்கள் புனித பயணமாக மக்கா மற்றும் மதீனாவுக்கு செல்வது வழக்கம். இது இஸ்லாத்தில் முக்கிய இறை வழிபாடாகவும் மற்றும் 5 முக்கிய கடமைகளில் ஒன்றாகவும் உள்ளது. இஸ்லாம் மார்க்கத்தில் மூன்று இடங்கள் புனித இடங்களாக கருதப்படுகிறது.
1. சவூதி அரேபியாவில் உள்ள ”மஸ்ஜிதுல் ஹரம்” என அழைக்கப்படும் மக்கா
2. சவூதி அரேபியாவில் உள்ள “மஸ்ஜிதுன் நபவி” என அழைக்கப்படும் மதீனா
3. ஃபலஸ்தீனத்தில் உள்ள “மஸ்திதுல் அக்ஸா” என அழைக்கப்படும் பள்ளிவாசல்
இந்த மூன்று புனித இடங்களில் எந்த இடத்திற்கு சென்றாலும் மற்ற வணக்கத் தலங்களை விட நன்மைகள் அதிகம் என்பது இஸ்லாத்தில் உள்ள நம்பிக்கையாகும்.
ஓரளவு பொருளாதார வசதியும் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கான உடல் வலிமையும் இருந்தால் ஹஜ் செய்வது முஸ்லிம்களின் மீது கடமையாகும். புனித யாத்திரை மேற்கொள்வோர் சவூதி அரேபியாவுக்கு செல்லும் போது மக்காவின் எல்லை பகுதியில் “இஹ்ராம்” எனும் வெண்ணிற ஆடையை அணிந்து கொண்டு மக்காவில் நுழைய வேண்டும்
மக்காவில் இறைவழிபாட்டினை முடித்துவிட்டு இஸ்லாமியர்களின் இறைத் தூதரான நபிகள் நாயகம் வாழ்ந்து மறைந்த புனித மதீனா நகருக்கு பயணம் மேற்கொண்டு அங்கே இறை வழிபாடுகளை நடத்துவார்கள். புனித பயணத்தில் இரண்டு விதமான பயணங்கள் உண்டு. ஒன்று “ஹஜ்” யாத்திரை மற்றொன்று “உம்ரா” எனப்படும் பயணமாகும்.
ஹஜ் என்பது இஸ்லாமிய மாதத்தின் 12வது மாதமான துல்ஹஜ் மாதத்தில் இறைத் தூதர் இப்ராஹிம் நினைவாக இந்த புனித பயணம் இஸ்லாமியர்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது. துல்ஹஜ் மாதத்தை தவிர்த்து பிற மாதங்களில் மக்காவுக்கு செல்லும் பயணம் உம்ரா எனப்படும்.
குர்பானி எனும் அறுத்து பலியிடுதல் :
இறைத்தூதர் இபுறாஹிம் – இஸ்மாயில் இடையே நடைபெற்ற பாசப் போராட்டம், இறைவனின் கட்டளை, இஸ்மாயிலின் தியாகம், இபுறாஹிம் சோதனையில் வெற்றி பெற்றது என ஒட்டுமொத்தமான நிகழ்வுகளை நினைவுகூற இறைவன் குர்பானி எனும் அறுத்து பலியிடும் நிகழ்வை முஸ்லிம்களுக்கு கடமையாக்கியுள்ளான். பொருளாதார வசதி உள்ள நபர்கள் குர்பானி கொடுக்க வேண்டும். குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற பிராணியாக ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டதாக இறைவன் புனித குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான்.
மக்காவிற்கு புனித பயணம் மேற்கொள்வோர் அனைத்து வழிபாடுகளையும் முடித்து , தலை முடியை களைந்து மொட்டை அடித்த பின்னர் இறுதியாக ஆட்டை அறுத்து ஏழைகளுக்கு பகிர்ந்து அளிப்பர். மக்காவிற்கு செல்லாத முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகை தினமான இன்று ஒன்று கூடி திடலில் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் தாங்கள் வளர்த்த ஆடு, மாடு போன்றவற்றை அறுத்து பலியிடுவார்கள். அறுத்து பலியிட்ட இறைச்சியை மூன்று பங்குகளாக பிரித்து ஒரு பங்கை தங்களுக்கும் மற்றொரு பங்கை உறவினர்களுக்கும் மீதமுள்ள பங்கை ஏழைகளுக்கும் பிரித்து கொடுப்பர்.
இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் கொண்டதுதான் பக்ரீத் எனும் ஹஜ் பெருநாள்.








