பெண்கள் குறித்து தாம் ஆபாசமாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதற்காக யோகா குரு பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் தானே நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் ஒன்றின் சார்பில் பெண்களுக்கான யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற யோகா குரு பாபா ராம்தேவ், பெண்கள் உடை அணிவது தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
பாபா ராம்தேவை கண்டித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த விவகாரம் தொடர்பாக மாநில பெண்கள் ஆணையம் பாபா ராம்தேவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசுக்கு பதில் அளித்து பாபா ராம்தேவ் அளித்துள்ள விளக்கத்தில், தானேயில் நடந்த நிகழ்ச்சியில் தனது ஒரு மணி நேர பேச்சை திரித்து தவறான நோக்கத்துடன் சில வினாடி வீடியோவாக சிலர் வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தாம் ஆடை குறித்து சாதாரணமாகத்தான் பேசியதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். எனினும் அது யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மிகுந்த வருத்தத்தை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ள பாபா ராம்தேவ், தமது வார்த்தைகள் யாருக்காவது வேதனையை அளித்து இருந்தால் அதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்வதாக தெரிவித்துள்ளார்.







