இம்ரான் கான் பேரணி – இஸ்லாமாபாத்தில் பதற்றம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்தி வரும் பேரணி காரணமாக தலைநகர் இஸ்லாமாபாத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமராக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த இம்ரான் கான், கடந்த மாதம்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்தி வரும் பேரணி காரணமாக தலைநகர் இஸ்லாமாபாத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த இம்ரான் கான், கடந்த மாதம் பதவி இழந்தார். எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து அவரை பதவி இழக்கச் செய்தன. இதையடுத்து புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றுள்ளார்.

அமெரிக்க சதி காரணமாகவே தனது அரசு பதவி இழந்தது என்றும், தற்போது பாகிஸ்தானில் ஆட்சியில் இருப்பது இறக்குமதி செய்யப்பட்ட அரசு என்றும் கடுமையாக விமர்சித்து வரும் இம்ரான் கான், பொதுத் தேர்தல் நடத்த வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பகுதிகளிலும் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களை நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக தலைநகர் இஸ்லாமாபாத்தை முற்றுகையிடும் நோக்கில் தனது ஆதரவாளர்களுடன் அவர் வாகன பேரணியை மேற்கொண்டார்.

இன்று அதிகாலை அவரது வாகனம் இஸ்லாமாபாத்தை அடைந்தது. நகரின் முக்கிய பகுதியான டி சவுக்கை அவரும் அவரது ஆதரவாளர்களும் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன் காரணமாக அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பேரணியின்போது பல இடங்களில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, பலர் காயம் அடைந்துள்ளனர். போராட்டக்காரர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முற்றுகை காரணமாக இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம், அதிபர் மாளிகை, தலைமைச் செயலகம் ஆகியவற்றை பாதுகாக்கும் பணி ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை உள்துறை அமைச்சர் ரானா சனாவுல்லா கான் பிறப்பித்துள்ளார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை டி சவுக் பகுதியைவிட்டு நகர மாட்டோம் என அறிவித்துள்ள இம்ரான் கான், அதுவரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய மக்கள் திறள் காரணமாக இஸ்லாமாபாத் ஸ்தம்பித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.