முழுவீச்சில் அயோத்தி ராமர் கோயில் பணிகள்: குடமுழுக்கு விழா எப்போது? 

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் ஜனவரி 24ஆம் தேதிக்குள் திறக்கப்படும் என்று கோயில் தலைமை  அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் மகராஜ் அறிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணி பூஜை  கடந்த 2020ஆம்…

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் ஜனவரி 24ஆம் தேதிக்குள் திறக்கப்படும் என்று கோயில் தலைமை  அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் மகராஜ் அறிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணி பூஜை  கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தக் கோயில் 110 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. இந்த கோயிலைக் கட்ட ரூ.1000 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டது. 2.27 ஏக்கா் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமா் கோயிலின் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கருவறையில் மூலவர் குழந்தை ராமா்சிலையை செய்வதற்கு தேவையான இரு அரியவகை கற்கள் நேபாளத்தில் இருந்து அயோத்திக்கு கொண்டுவரப்பட்டு, செதுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அயோத்தியில் மூன்று மாடி ராமர் கோயிலின் தரை தளம் கட்டும் பணி டிசம்பர் இறுதிக்குள் நிறைவடையும் என்றும், குடமுழுக்கு விழா அடுத்த ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் என்றும் கோயில் கட்டுமானக் குழுத்தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஜனவரி 20-24 தேதிகளில் எந்த நாளிலும் பிரதமர் நரேந்திரமோடி  பிரதிஷ்டை தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி தேதி இன்னும் பிரதமர் அலுவலகத்தால் தெரிவிக்கப்படவில்லை,
ஜனவரி 14 ஆம் தேதி மகர சங்கராந்திக்குப் பிறகு ராமலல்லாவின் பிரதிஷ்டை செயல்முறையைத் தொடங்கவும், ராம் லல்லாவின் ‘பிரான் பிரதிஷ்டை’ (கும்பாபிஷேகம்) 10 நாள் சடங்குகளைக் கடைப்பிடிக்கவும் கோயில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி விழா நடக்கும்போது, பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகள், கிராமங்களில் இருந்து (தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலம்) இதைப் பார்க்குமாறு அறக்கட்டளை கேட்டுக்கொள்கிறது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் தலைமை அர்ச்சகர்  ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் ஜி மகராஜ் கூறுகையில், “இது (ராம் மந்திர்) தெய்வீகமானது மற்றும் பிரமாண்டமானது மற்றும் அழகாக கட்டப்படுகிறது. குறிப்பாக, தரை தளத்தில் உள்ள ‘கர்ப் கிரி’ தயாராக உள்ளது, மேலும் செதுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜன்னல்கள், கதவுகள் நிலுவையில் உள்ளன… தரை தளம் தயார் நிலையில் உள்ளது.. இந்த கோவிலை போல் வேறு எந்த கோவிலிலும் அழகாக இல்லாத வகையில் கட்ட முயற்சிப்பதாக கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.