டாம் குரூஸ் , ஹேலி அட்வெல் , விங் ரேம்ஸ், சைமன் பெக் , வனேசா கிர்பி , ஹென்றி செர்னி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள “மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கனிங்” – பாகம் ஒன்று படம் முந்தைய மிஷன் இம்பாசிபில் படங்கள் போல் உள்ளதா? இல்லையா? – எப்படி இருக்கு என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
பாராமெளன்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஃப்ரேசர் டாகார்ட் (Fraser Taggart) ஒளிப்பதிவில், லோர்ன் பால்ஃப் (Lorne Balfe) இசையில், கிறிஸ்டோபர் மெக்குவாரி (Christopher McQuarrie) இயக்கத்தில் மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கனிங் பாகம் ஒன்று வெளியாகவுள்ளது. இப்படம் Mission: Impossible -Fallout (2018) படத்தின் தொடர்ச்சியாக இயக்கப்பட்டுள்ளது, மற்றும் இது Mission Impossible திரைப்படத் தொடரின் 7வது பாகமாக வெளிவரவுள்ளது.
மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கனிங் பாகம் ஒன்றில், ஈத்தன் ஹன்ட் ஆக நடித்துள்ள டாம் குரூஸ் மற்றும் அவரது IMF குழுவும் சேர்ந்து உலகையே அச்சுறுத்தும் பயங்கரமான ஆயுதத்தை, கெட்டவர்கள் கையில் இருந்து சிக்காமல் தடுக்கும் மிக ஆபத்தான பணியைத் தொடங்குகின்றனர்.
உலகத்தின் தலைவிதி ஆபத்தில் இருக்க, ஈத்தனின் இருளடர்ந்த கடந்த காலம் நெருக்க, உலகம் முழுவதும் பயணிக்கும் ஆபத்தான சாகசங்கள் தொடங்குகின்றன. ஒரு மர்மமான, சர்வ வல்லமையுள்ள எதிரியை எதிர்கொள்ளும் ஈத்தன், தனது பணியை விட வேறு எதுவும் முக்கியமில்லை என்று கருத வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகிறார். அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களின் உயிரை விடவும், இந்தப் பணி அதி முக்கியத்துவமானதாக அவருக்கு மாறுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 6, 2020 அன்று தொடங்கியது. இந்தப் படப்பிடிப்பில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,200 மீட்டர் உயரமான நார்வேயின் ஹெல்செட்கோபன் மலையின் செங்குத்து பாறையில், ஒரு சரிவு மேடை அமைத்து, மாற்றியமைக்கப்பட்ட ஹோண்டா CRF 250 பைக்கை டாம் குரூஸ் ஓட்டுகிறார். பின் 4000 அடி குறுகிய மலையிடுக்கில் பைக்குடன் குதித்து, பாராசூட்டைத் திறந்து தரையிறங்குகிறார்.
இதற்காகப் படத்தின் முன் தயாரிப்பின் பொழுது, ஒரு வருடம் ஒத்திகை பார்த்துள்ளார் டாம் குரூஸ். கேமரா வைத்து இந்தக் காட்சி படமாக்கப்படுவதற்கு முன், 500 ஸ்கை டைவ் (skydive)-களையும், 13000 motocross jumps-களையும் பயிற்சிக்காகச் செய்து முடித்து, அதி பயங்கர ஸ்டன்ட் காட்சிக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுள்ளார் டாம் குரூஸ். இப்படியான அர்ப்பணிப்பால், டாம் க்ரூஸ் மீண்டுமொரு முறை வெள்ளித் திரையில் ஜொலிக்கிறார். இவ்வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ‘மிஷன் இம்பாசிபிள் – டெட் ரெகனிங்’ படத்தின் மூலம் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலையும் புயல் போல் கவரவுள்ளார். இப்படத்தில் டாம் க்ரூஸ் 61 வயது என்கிற அடையாளமே தெரியாமல், தோற்றத்திலும், சாகசங்களிலும் நம்மை வாய்பிளக்க வைக்கிறார்.
இந்த படத்தின் குறை என்று பார்த்தால் நீண்ட வசனங்கள் மட்டுமே. லாஜிக் மீறல்கள் படம் முழுக்க இருந்தாலும், அதைப் பற்றி ஒரு நொடி கூட நம்மை சிந்திக்க விடாமல் கட்டி போட்டிக்கிறார் இயக்குனர்.
“‘மிஷன்’ படம் என் வாழ்வின் விருப்பத்திற்குரிய ஒன்றாக மாறியதற்கு, அந்தப் படத்திற்காக நானெடுத்த பயிற்சியே முக்கியமான காரணமென நினைக்கிறேன். இத்தொடரில், டாம் க்ரூஸோடு எனக்கு இது மூன்றாவது படம்” என MI6 ஏஜென்டாக நடித்திருக்கும் சக நடிகை ரெபேக்கா பெர்குசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இயக்குநர் க்றிஸ்டோபர் மெக்குவாரி பேசுகையில், “இந்தப் படம், அதிரடி சாகசங்களுக்காக மட்டுமல்லாமல் குறிப்பாக, மோட்டர்பைக் ஜம்ப்பிங் ஸ்டண்ட்களுக்காகவும் அதிகம் பேசப்படுகிறது. பல வகையிலும், படத்தில் பணி புரிந்த இத்தகைய பொக்கிஷமான தருணங்கள் வாழ்நாளுக்குரியதாக மாறிவிட்டன. டாமும் நானும் பதினாறு வருடங்களாக இணைந்து பணியாற்றுகிறோம். கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்கள் செய்துவிட்டதாகக் கருதுகிறேன்’ என்றார் .
“மனிதனை விட தொழில்நுட்பமே மேன்மையானது என மனதார நம்பும் உளவாளியாக, நான் அவரைப் (டாம் க்ரூஸ்) பார்க்கிறேன்” என்றார் வில்லனாக நடித்துள்ள ஈசை மோரல்ஸ் (Esai Morales).
சாகச விரும்பிகளும், ஆக்ஷன் ரசிகர்களும் கொண்டாடும் இப்படம், ஜூலை 12 அன்று உலக ரசிகர்களுக்காக தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
-துர்கா பிரவீன் குமார், நியூஸ் 7 தமிழ்







