தடுப்பூசி விநியோகம் தாமத்தால் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படும் சராசரி எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியைக் கடந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கடந்த மாதத்தைக் காட்டிலும் ஜூலை மாதத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தோய்வு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் ஜூலை 05-10ம் தேதி வரையில் சராசரியாக 37.2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கையானது ஜூன் 21ல் 42 லட்சமாகவும், ஜூன் 28 – ஜூலை 04 வரை 42 லட்சமாகவும் பதிவாகியிருந்தது. இந்த எண்ணிக்கையானது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்யப்படும் கோவின் இணையத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. தொற்றைக் கட்டுப்படுத்த நாளொன்றுக்கு 40-45 லட்சம் தடுப்பூசிகளை செலுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதற்கு 12 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. ஆனால், கோவாக்சின் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் பெங்களூரு தொழிற்சாலையிலிருந்து தடுப்பூசிகள் தாமதமாக விநியோகிக்கப்பட்டதே இந்த பின்னடைவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை 4,08,040 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







